டெல்லியில் பன்னீருக்கு மரியாதை! டென்ஷனில் எடப்பாடி!

டெல்லி டின்னருக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பா.ஜ.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி முக்கியமான சில எம்.பி.க்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் அனைவரும் குவியத் தொடங்கிவிட்டனர்.


இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே பன்னீர்செல்வத்துக்கு டெல்லி பா.ஜ.க.வினர் கொடுக்கும் கூடுதல் முக்கியத்துவதைப் பார்த்து எடப்பாடி டென்ஷனில் கொதித்துக்கொண்டு இருக்கிறாராம். வழக்கம்போல் எடப்பாடியார் டெல்லி தமிழ்நாடு ஹவுஸில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். அப்போதுதான் பன்னீர்செல்வம் ஏன் அங்கே தங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

உடனே, பன்னீர்செல்வம் அசோகா ஓட்டலில் தங்கியிருக்கிறார் என்று எடப்பாடிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்செயலாக அசோகா ஓட்டலில் பன்னீர் தங்கியிருக்கிறார் என்று எடப்பாடி நினைக்க, அதன்பிறகுதான் இரவு அமித் ஷா கொடுக்கப்போகும் விருந்து, அசோகா ஓட்டலில்தான் என்பத் தெரியவந்ததாம்.

காலை முதலே அங்கே தங்கியிருக்கும் பன்னீர், விருந்து ஏற்பாடுகளைக் கவனிக்க வரும் ஒவ்வொரு பா.ஜ.க. பிரமுகர்களையும் நேரில் சந்தித்துப் பேசுவதும், அவர்களுக்கு அன்பளிப்புகள் தருவதும் எடப்பாடிக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் இவர்கள் இருவரும் ஒன்றுசேர்ந்து எங்கேயும் பிரசாரம் செய்யவில்லை எனும்போதே இவர்களுக்கு இடையிலான மோதல் வெளியே தெரியவந்தது.

இப்போது டெல்லிக்கு பன்னீர் தனியாக வரவில்லை, அவரது மகன் ரவீந்திரநாத்தும் வந்திருக்கிறார். ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்பதெல்லாம் தெரியவர, எப்படி ரியாக்ட் செய்வது என்று புரியாமல் தவிக்கிறாராம் எடப்பாடி.