நாம் ஒரு அணு ஆயுதத்தை பயன்படுத்தினால் பாகிஸ்தானையே இந்தியா தரைமட்டமாக்கிவிடும்! முஷாரஃப் ஒப்புதல்!

பாகிஸ்தான் ஒரே ஒரு அணு ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால் கூட இந்தியா 20 அணு ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானை தரை மட்டமாக்கிவிடும் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் தெரிவித்துள்ளார்.


ராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடித்த முஷாரஃப், தற்போது தனக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதைக் கருதி அபுதாபியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு மீண்டும் அபாய கட்டத்துக்குச் சென்று விட்டதாகத் தெரிவித்தார்.

 

இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுதப் போர் வர வாய்ப்பில்லை என்று கூறிய அவர்எனினும் இந்தியா மீது பாகிஸ்தான் ஒரே ஒரு அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால் கூட, பதிலுக்கு இந்தியா 20 அணு ஆயுத ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானை தரைமட்டமாக்கிவிடும் என்றார்.  

 

அவ்வாறு நடைபெறாமல் இருக்க எடுத்த எடுப்பிலேயே இந்தியா மீது பாகிஸ்தான் 50 அணு ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்றார். அப்போது 20 ஏவுகணைகளின் திறன் 50 ஏவுகணைகளுக்கு முன்னால் எடுபடாமல் போய்விடும் என்றார்.

 

அதற்கு பாகிஸ்தான் அரசு தயாராக இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்காஷ்மீரீன் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தால் அதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பர்வேஸ் முஷாரஃபின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது

 

மேலும் தான் நாடு திரும்ப தற்போது சூழ்நிலை சாதகமாக இருப்பதாகவும் முஷாரஃப் தெரிவித்தார். அமைச்சரவையில் உள்ள பாதிப் பேர் தனது ஆட்கள் என்றார். சட்டத்துறை அமைச்சரும், அட்டர்னி ஜெனரலும் கூட தன்னுடையவர்கள் என்றும் அவர் கூறினார்