மோடிக்கு பொருளாதாரம் தானாவும் புரியாது, அடுத்தவங்க சொன்னாலும் புரியாது… சிதம்பரம் செம தாக்குதல்.

உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி எனப்படும் ஜி.டி.பி.யை மைனஸ்க்கு கொண்டுபோனதற்கு காரணம், மோடியின் புரிதல் இல்லாததுதான் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக தாக்குதல் தொடுத்துள்ளார்.


இன்று அவர், "இந்த ஆண்டின் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகக் குறைவான அளவாக -23.9% ஆக சரிந்தது. இந்திய பொருளாதார மொத்த உற்பத்தி வளர்ச்சி, இதுபோன்ற ஆழமான பாதாளத்துக்கு செல்லும் என்பதை பிரதமரையும் இந்திய நிதியமைச்சரையும் தவிர அனைவரும் அறிந்திருந்தார்கள்.  

அவர்களது திறமையின்மைக்கு ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய விலையை இந்தியா செலுத்தி வருகிறது. பொருளாதாரம் கவலைப்படும் அளவுக்கு இல்லை என்று அவர்கள் கூறிவந்த பொய், இப்போது வெளிச்சத்துக்கு வந்து விட்டது" என்று தெரிவித்துள்ளார்.  

மேலும் அவர், ‘’ இந்த நாட்டின் விவசாயிகளையும் அவர்களை ஆசீர்வதிக்கும் கடவுளுக்கும்தான் ரகசியமாக நன்றி தெரிவிக்க வேண்டும். காரணம், தற்போது விவசாயத்தைத் தவிர மற்ற எல்லா துறைகளும் கடுமையாக சரிந்துள்ளன. உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், ஹோட்டல் அனைத்தும் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைந்துவிட்டன. 

கொரோனா தொற்று பரவலுக்கு நீண்ட காலம் முன்பே இப்படிப்பட்ட நிலை வரும் என நாங்கள் எச்சரிக்கை செய்தோம். பொது முடக்கத்தை அறிவித்த பிறகு கடந்த மூன்று மாதங்களாக எச்சரிக்கை செய்தோம். அனைத்து எச்சரிக்கைகளை அவர் கண்டுகொள்ளவில்லை, அவராகவும் சிந்தித்து செயல்படுத்தவில்லை” என்று கடுமையாக தாக்கியுள்ளார்.