பி.டி.அரசகுமாருக்கு பா.ஜ.க.வில் இருந்து கல்தாவா? வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பே இல்லை!

வரலாற்றில் முதன்முறையாக பா.ஜ.க. தலைவர் அரசகுமார் ஸ்டாலினை முதல்வராகப் போகிறார் என்று பாராட்டியதுதான் பெரும் பரபரப்பைக் கிளப்பிவருகிறது.


புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட அரசகுமார், மேடைக்கு வரமால் கீழே இருந்ததைக் கண்ட ஸ்டாலின் உடனே, அரசகுமாரை மேடை ஏற்றினார். அந்த நன்றிக் கடனாகவோ என்னவோ, 2021ல் ஸ்டாலின் முதல்வராக வருவார் என்று அழுத்தம் திருத்தமாக மேடையில் கூறினார்.

அதைக் கேட்ட பா.ஜ.க.வினர் அதிர்ந்தே போனார்கள். உடனடியாக மறுப்பு கொடுக்கவேண்டும் என்று அரசகுமாருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து அரசகுமார் கொடுத்திருக்கும் விளக்கம் இதுதான்.

‘‘நான் அந்த திருமணத்தில் நான் பேசியத்தை முழுமையாக வெளியிடாமல் ஒரு சில நிமிடங்கள் மட்டும் திரித்து சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். என்னை பேச அழைத்தபோது யதார்த்தமான முறையில் ஜனநாயக முறையில் தி.மு.க. தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறார். இதில் ஏதும் பா.ஜ.க.வின் குரலாகவும் பா.ஜ.க.வின் வார்த்தைகளால் நான் வெளியிடவில்லை.

பா.ஜ.க.வின் துணைத்தலைவராக இருக்கும்போது தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று நான் எப்படி சொல்லுவேன். பொதுவாகவே ஸ்டாலின் அவர்கள் எப்போது பார்த்தாலும் எங்கு பார்த்தாலும் நலம் விசாரிப்பார் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் அரசியலில் பயணிக்கிறோம்.

அந்த நாகரீகமான மரபின் அடிப்படையில் திருமண வீட்டில் நடந்த ஒரு நிகழ்வை அவருடைய எதிர்பார்ப்புகள் எண்ணங்கள் காலம் வரும் காத்திருங்கள் காரியம் நடக்கும் என்று நான் சொன்னதை தி.மு.க.விற்கு ஆதரவாகப் பேசியதை போன்று ஊடகங்கள் பரபரப்பாக ஆக்கியிருக்கிறார்கள்.

பா.ஜ.க. ஆட்சி கட்டில் அமர்த்தப்பட வேண்டும் என்றுதான் குறிப்பாக நான் உழைத்து கொண்டிருக்கிறேன் ஒரு கட்சியோடு நிர்வாகியாக இன்னொரு கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொல்ல எனக்கு அவசியம் இல்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே போன்று ஒரு திருமண நிகழ்வில் ஸ்டாலின் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறினேன்.

அதேபோன்று இந்த திருமணத்தில் இன்றும் அழகு குறையாமல் இருக்கிறீர்களே என்ற அடிப்படையில் எம்.ஜி.ஆர் ஒப்பிட்டு சொன்னேன். என்னைப் பொறுத்தவரையில் சாதாரணமாகத்தான் சொல்லப்பட்டது பா.ஜ.க.விற்க்கும் தி.மு.க.விற்கும் கொள்கை ரீதியாக மாறுபட்ட சிந்தனை மாறுபட்ட கருத்து உண்டு.

ஜனநாயக முறையில் அவர் முதலமைச்சர் ஆவதில் வாழ்த்துக்கள் என்றுதான் கூறினேன் என்னுடைய தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தினேன். ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால் இதை பயன்படுத்தி அருவருக்கத்தக்க வகையில் சமூகவலைதளங்களில் பேசி இருக்கிறார்கள் இது போன்ற ஆட்களை அடையாளம் கண்டு நான் சும்மா விடுவதில்லை என்று எச்சரிக்கையாக கூறுகிறேன். அ.தி.மு.க. ஆட்சி பொறுத்தவரையில் எங்களுக்கு திருப்தியாக இருக்கிறது அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

என்னுடைய பேச்சு தொண்டர்களை காயப்படுத்தியிருந்தால், தலைமை எடுக்கின்ற முடிவுக்கு கட்டுப்படுகிறேன் என்று அரசகுமார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விளக்கம் போதாது, உடனே அவரை கட்சியில் இருந்து தூக்கவேண்டும் என்று பா.ஜ.க.வினர் எதிர்ப்புகுரல் தெரிவிக்கின்றனர். கட்சி நடவடிக்கை எடுக்குமா என்ன..? இருக்கும் ஆட்களை குறைத்துவிட்டால் எதிர்காலம் என்னவாகும் என்பதுதான் கேள்வி.