கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் பணிக்கு மணல் அனுப்புகிறார் ஓபிஎஸ் மகன்!இளங்கோவன் குற்றச்சாட்டு!

தேனி: தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தேனியில் நேற்று அளித்த பேட்டி:


தேனியில் பிரதமர் மோடி கூட்டத்திற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெர்மிட் இல்லாமல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து விதியை மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளோம். என்னை வெளியூரில் இருந்து வந்து தேனியில் போட்டியிடுவதாக மோடி கூறுகிறார்.

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் எங்கிருந்து வந்து ஆண்டிபட்டியில் போட்டியிட்டார்கள்? குஜராத்திலிருந்து தற்போது உத்தரபிரதேசத்தில்  மோடி போட்டியிடவில்லையா? இந்திய ஒருமைப்பாட்டை குலைக்கும் வகையில் மோடி பேசுவது ஜனநாயகத்திற்கு கேடு.

மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று ராகுல்காந்தி கூறவே இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை அந்தந்த மாநில பிரச்னைகளில் தலையிடாது. அப்படி ராகுல் கூறியிருப்பதை நிரூபித்தால் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன். தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான தேனி வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், கர்நாடகாவில்  மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டில் இருந்து மணல் அனுப்பி பணம் சம்பாதிக்கிறார்.

மற்ற பகுதிகளில் பண மழை பொழிகிறது. தேனியில் அதிமுக வேட்பாளர் மூலம்  பண சுனாமியே அடிக்கிறது. எந்த சுனாமியையும் வெல்லும் திறன் எங்களிடம்  உள்ளது. சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் 22 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.