ஓ.பி,.எஸ்சின் சீக்ரெட் வாரணாசி பிளான்! கை கொடுக்கும் மோடி! திகிலில் எடப்பாடி!

தமிழகத்தில் 4 இடைத்தேர்தல் தொகுதிக்கு வேட்பாளர்களாக யாரை அறிவித்தாலும் பரவாயில்லை என்று குடும்பத்துடன் வாரணாசி போய்விட்டார் ஓ.பி.எஸ். அங்கே சென்று திதி கொடுத்து, யாகம் நடத்தியதுடன் நில்லாமல் மோடியுடன் பேரணியில் மகனுடன் கலந்துகொண்டார். இது மட்டுமின்றி அமித் ஷாவுடன் ஓ.பி.எஸ். நடத்திய ரகசிய பேச்சு வார்த்தைதான் லோக்கல் அ.தி.மு.க.வினர் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.


ஏனென்றால், அ.தி.மு.க.வில் தனிப்பெரும் சக்தியாக வரவேண்டுமென எடப்பாடி ஆசைப்படுகிறார். அதற்காக பல்வேறு அதிரடி மூவ்களை செய்து வருகிறார். இந்த நிலையில், கட்சி பற்றியும் தேர்தல் பற்றியும் எந்தக் கவலையும் இல்லாமல் மோடிக்குப் பின்னே ஓ.பி.எஸ். நிற்பதற்குக் காரணம் கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து வருகிறது. 

தேர்தலுக்குப் பிறகு மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக பதவி ஏற்பார் என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. ஆனால், தமிழகத்தை இதுவரை ரிமோட் கண்ட்ரோல் செய்துவந்தது போலின்றி புதிய நடவடிக்கை மூலம் ஆட்டிப்படைக்க நினைத்துள்ளாராம் மோடி. அதன்படி தமிழக அரசியலில் ஊழல் புகாருக்கு ஆட்பட்ட முக்கிய அமைச்சர்கள் அனைவரும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள்.

அதனால், ஆட்சிக்கு ஆபத்து உருவாகும் நிலை ஏற்படும்போது மீண்டும் ஓ.பி.எஸ்.க்கு முக்கிய பதவி கொடுக்கப்படுமாம். கட்சி, ஆட்சி இரண்டுமே ஓ.பி.எஸ். வசம் வந்து சேரும் என்கிறார்கள் டெல்லி பா.ஜ.க.வினர். எடப்பாடி முருகப்பெருமானைப் போன்று ஊர் ஊராகச் சென்று ஆதரவாளர்களை தன்பக்கம் திருப்பிவரும்போது, பிள்ளையார் போன்று மாம்பழம் பறிக்க ஆசைப்படுகிறார் ஓ.பி.எஸ். கணக்கு நல்லாத்தான் இருக்கு, நடக்கணுமே.