விஜயகாந்திடம் 5 முறை கெஞ்சிய எடப்பாடி, பன்னீர்செல்வம்! அமைச்சர் வெளியிட்ட ஷாக் தகவல்!

விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வருவார் என்று அ.தி.மு.க. தெனாவெட்டாக இருந்துவருகிறது. அதே நேரம் விஜயகாந்த் கட்சியிடம் பா.ஜ.க.வினர்தான் பேசிவருவதாக சொன்னார்கள்.


 ஆனால், உண்மை விவகாரத்தை இப்போது அமைச்சரே போட்டுக்கொடுத்துவிட்டார். தேனியில் கடந்த 3ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பி.எஸ்., திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பேசுவதற்கு முன்பாக பேசினார் வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார்.

அப்போது அவர் எடுத்தவுடன் ஓ.பி.எஸ்.க்கு ஐஸ் வைத்துப் பேசினார். ‘‘ஓ.பி.எஸ் மகன், ரவீந்திரநாத்குமார் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றிபெறுவார். ஆனால், விருதுநகரில் போட்டியிட்டால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்’’ என்றவர் அடுத்து எடப்பாடிக்கு ஐஸ் வைத்தார்.

‘‘தினகரன் பக்கம் இருந்தவர்கள் எங்களுக்கு தூதுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் எடப்பாடியாரின் சிறப்பான ஆட்சிதான். அதனால்தான் அங்கே போனவர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்று சொன்னார்.

அடுத்துப் பேசியதுதான் அதிர்ச்சி ரகம். ஆம், ‘‘நான் ஒரு உண்மையை சொல்லப்போகிறேன். இதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ். என் மீது கோபப்பட்டாலும் சரி, அதனை இங்கே சொல்லியே ஆகவேண்டும். இதுவரை ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விஜயகாந்துடன் ஐந்து முறை ரகசிய கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

இது யாருக்காவது தெரியுமா?’’ என்று போட்டு உடைத்தார். இதுவரை பா.ஜ.க.தான் பேசுகிறது என்று கெத்து காட்டிவந்த நிலையில், அமைச்சரே இப்படி போட்டுக்கொடுத்தது அத்தனை பேரையும் அதிர்ச்சி அடையவைத்துவிட்டது. ஏனென்றால் 5 முறை இவர்கள் பேசியும் விஜயகாந்தை வழிக்குக் கொண்டுவர முடியவில்லை என்றால் என்ன அர்த்தம் என்று யோசிக்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு தொகுதி அதிகம் என்றால், எங்களுக்கு அமைச்சர் பதவிக்கு உத்தரவாதம் கொடுங்கள் என்று கேட்கப்படுகிறதாம். மத்தியில் ஆட்சி அமைந்தால் மத்திய அமைச்சர் பதவி வேண்டுமாம்.

ஒருவேளை பா.ஜ.க. அங்கு ஆட்சி அமைக்கவில்லை என்றால், தமிழக அமைச்சரவையில் பதவி கொடுக்கும் வகையில் இடைத் தேர்தலில் ஏதேனும் தொகுதி வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். எப்படியாவது பிடிச்சுப் போடுங்க, பிறகு பார்த்துக்கிடலாம் என்று விஜயகாந்த் சொல்வதற்கு எல்லாம் சம்மதம் சொல்கிறார்களாம். அதனால் செவ்வாய் அன்று முடிவெடுத்து, புதன் கூட்டணி அறிவிக்கப்படலாம்.