ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குங்க..! ஆளுநரை நெருக்கும் எதிர்க் கட்சிகள்

சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ச்சியாகப் பேசிவரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கவேண்டும் என மீண்டும் ஒரு முறை பிரச்னை வலுத்துவருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பல தரப்பினரும் இது குறித்து கோரிக்கை வைத்துள்ளனர்.


ஜெயலலிதா மறைவை அடுத்து, அதிமுகவில் ஏற்பட்ட பன்னீர், சசிகலா பிரிவுகளில் சசி தரப்பு ஆளாக இருந்தார், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தன் மீது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்வகையில் அவ்வப்போது அசாதாரணமாக எதையாவது பேசத் தொடங்கினார். சசிகலாவுக்கு ஆதரவாகவும் பன்னீருக்கு எதிராகவும் பலரும் பேசிய சூழலில், இவரும் அதில் தனித்துத் தெரியும்படியாக நடந்துகொண்டார்.

அந்தப் பிரச்னை ஒருவழியாக முடிந்ததை அடுத்து, ஓ.பன்னீர், எடப்பாடி இருவரையும் பாராட்டி ஆகாஓகோவெனப் புழகத் தொடங்கினார். அதுவரை பெரிதாக பிரச்னை இல்லை. திடீரென பிரதமர் மோடியை ஆதரித்தும் அவர் பேசத் தொடங்கியதும் கூடுதலாக கவனத்துக்கு ஆளானார். அதன் பிறகு பாஜகவுக்கு ஆதரவாகவும் பாஜகவுக்கு எதிராக கருத்துக்கூறும் சீமான் போன்றவர்களையும் தன் பேச்சில் வறுத்தெடுக்க ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவேண்டுமெனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையத் தலைவர் கமல் பேசியதற்கு எதிரொலியாக, அவரின் நாக்கை அறுக்கவேண்டும் எனப் பேசி, அதிர்ச்சியடைய வைத்தார்.

அதற்கு பல கட்சிகளின் தலைவர்களும் பொது அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என அவர்கள் போர்க்கொடி தூக்கினர்.ஏற்கெனவே ‘மோடி எங்கள் டாடி’ எனப் பேசிய அவர் மீது அதிமுகவுக்கு உள்ளேயே எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. கடந்த அக்டோபரில் கோரிக்கை மனு கொடுக்கச்சென்ற இசுலாமிய ஜமாத் பிரதிநிதிகளிடம் அமைச்சருக்குரிய வரம்பை மீறி பேசி சர்ச்சைக்கு ஆளானார்.

இந்நிலையில் அண்மையில் திருச்சியில் நிகழ்ந்த ஒரு கொலையை தனிப்பட்ட பிரச்னையால் ஏற்பட்டது என போலீஸ் தெரிவித்தநிலையில், அதை மறுக்கும்படியாக, ‘மதரீதியான மோதலால்தான் அந்தக் கொலை நடந்தது’ என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்துத் தெரிவித்தார். இதனால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என மூன்றாவது முறையாக கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் அவர் வம்புக்கு இழுத்திருபப்தால், திமுக தரப்பு கொந்தளித்துள்ளது. திமுக பொருளாளர் துரைமுருகன், ஆளுநருக்கு இன்று அனுப்பிய கடிதத்தில், அமைச்சர் பதவிக்குரிய அரசமைப்பு சாசன உறுதிமொழியை மீறி நடந்துகொள்ளும் ராஜேந்திர பாலாஜியை பதவிநீக்கம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அக்கடிதத்தை, திமுகவின் சென்னை மாவட்டச் செயலாளர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களுமான ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணி ஆகியோர் ஆளுநரின் செயலரிடம் நேரில் அளித்தனர். போலிஸ் டிஜிபிக்கு தனியாகவும் ஒரு மனுவை அளித்தனர். 

பேரா. அருணன் தலைமையிலான தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அமைச்சரின் இத்தகைய பேச்சு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு அமைச்சர் மக்கள் மத்தியில் மத ரீதியான மோதலை உருவாக்கும் நோக்கில் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இது ஆர்எஸ்எஸ் பரிவாரத்தினர் பேசும் பாணி. இதை அண்ணாதிமுக அமைச்சர் ஒருவர் கடைப்பிடிப்பது விநோதமாக உள்ளது. ஒரு கொலை சம்பவத்தை எந்த மதத்தைச் சேர்ந்தவர் செய்தாலும் அதற்கு உரிய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்வதற்கு பதிலாக அதை வகுப்புவாத கண்ணோட்டத்துடன் ஒரு அமைச்சரே பேசி தமிழ்நாட்டில் நிலவிவரும் மத நல்லிணக்கத்தை குலைப்பது மிகவும் அபாயகரமான போக்காகும். அமைச்சரின் இந்த விபரீதப் பேச்சை முதலமைச்சர் வெளிப்டையாகக் கண்டிக்கவேண்டும்.

இல்லையெனில் அவருக்கும் இது ஏற்புடையது என்றே மக்கள் முடிவு கட்டுவார்கள். அது இந்த ஆட்சிக்கு மிகப்பெரிய களங்கமாகிப் போகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் இராகுல் காந்தியைப் பற்றி அவதூறாகப் பேசினார் என்றும் காங்கிரசாரையும் கொந்தளிக்க வைத்தவர் ராஜேந்திர பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.