வரலாறு காணாத மழை! திரும்பிய பக்கம் எல்லாம் நிலச்சரிவு! சாலைகள் துண்டிப்பு! தவிக்கும் நீலகிரி!

ஊட்டி: கடந்த 10ஆண்டுகளில் இல்லாத வகையில் ஊட்டி முழுவதும் மழை, வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது.


ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நீலகிரியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, எதிர்பார்த்த பருவமழை இல்லாத நிலையில், தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி முதல்,

பலத்த மழை நீலகிரி மாவட்டம் முழுக்க கொட்டி தீர்த்தபடி உள்ளது. குறிப்பாக, ஊட்டி, குந்தா, கூடலுர், பந்தலுர் ஆகிய பகுதிகளில், மழை காரணமாக, பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதிகளில் இயங்கும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர, நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி பகுதிகளில் இடைவிடாத மழை வெளுத்து வாங்குகிறது. ஊட்டி - கூடலுர் சாலையில் பைக்காரா அருகே சாலை பிளவு ஏற்பட்டு, போக்குவரத்து முடங்கியுள்ளது.

அவலாஞ்சி தீவு போல மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கும் பணியில் பொதுப் பணித்துறையினர்  ஈடுபட்டுள்ளனர். இருந்தாலும், வெள்ளப்பெருக்கு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகளவில் உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், கூடலுரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வாழை, இஞ்சி உள்ளிட்ட பயிர்கள், மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.