மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தேவைதானா..? இப்போது படிக்கவில்லை என்றால் மூளை மங்கிவிடுமா..?

இப்போது வீடு தோறும் ஸ்மார்ட் போன் வேண்டும் என்று கேட்கும் பிள்ளைகள் அதிகமாகிவிட்டார்கள்.


ஏனென்றால், ஆசிரியர் பாடம் நடத்துவதை கேட்கத்தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். ஏனென்றால், வீட்டிலேயே நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள். இதுகுறித்து எழுத்தாளர் அழகிய பெரியவனின் ஆக்கபூர்வமான பதிவு இது. 

ஆன்லைன் வகுப்புகள் பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு படிக்கவில்லை என்றால் மாணவர்களின் மூளைகளெல்லாம் செல்லரித்து காதுவழியாகக் கொட்டிவிடும் என்று கல்வி வள்ளல்களும் அவர்களின் முகவர்களும் பயமுறுத்திக்கொண்டு இருக்கிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் கல்லா கட்டிவிடவேண்டும் என்பது தான் கல்விக் கொள்ளையர்களின் நோக்கம். 

கால அட்டவணை போட்டு, காலை முதல் மாலை வரை மாணவர்கள் கைபேசி/கணினி/கணிப்பலகை முன்பு உட்கார வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். பெற்றோர் கைப்பேசி வாங்கவும், இணைய இணைப்பு பெறவும் அலைகிறார்கள். இந்தக் கல்வி ஆண்டின் கட்டணங்களை கட்ட இஎம்ஐ-யை தனியார் பள்ளிகளே ஏற்படும் செய்கின்றன என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. கல்விச் சூழலின் மாபெரிய வீழ்ச்சி இது.

எல்லா பெற்றோராலும் கைப்பேசியும், தடையில்லா இணைய இணைப்பும் வாங்க முடியுமா? தொடர்ந்து இணையத்தில் இருந்தால் மாணவரின் உடல் நலமும், மன நலமும் என்ன ஆகும்? ஒரு வேளை சோற்றுக்கே இன்று வழியில்லாத கிராமப்புற பெற்றோரும் பிள்ளைகளும் இணைய வழி கல்வியைப் பெறுவது எப்படி? இது அப்பட்டமான கல்வி பாகுபாடு இல்லையா?

பாடநூல்களிலும், வகுப்பறையிலும் மட்டுமே இல்லை கல்வி. இந்தக் காலத்தை அனுபவ கல்வி பெற மாணவர்களை ஊக்குவிக்கலாம். வீட்டு வேலைகள், சமையல், மரபார்ந்த தொழில்கள், கைவினைக் கலைகள், கலை வடிவங்கள், விவசாயம் ஆகியவற்றை பற்றி மாணவர்களை எழுதியோ, பதிவு செய்தோ வைக்கச்சொல்லி பள்ளி திறக்கும் போது கொண்டுவரச் சொல்லலாம். அவர்களின் மற்ற திறன்களை வளர்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளலாம். 

எனக்கு வேறொரு யோசனையும் வருகிறது. இன்று நான் என்னுடைய வீட்டைச்சுற்றி இருக்கும் பிள்ளைகளை அழைத்து, வாசலில் இடைவெளி விட்டு அமரவைத்து ஒரு மணி நேரம் பொதுவாக எழுத்துப்பயிற்சி அளித்தேன். எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் பதினைந்து மாணவர்கள் வந்தனர்.

இதைப்போல அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாதுகாப்புடன் தங்களது வீட்டுக்கு அருகில் உள்ள மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் வகுப்புகள் எடுக்கலாம். நோய்த் தொற்று இருக்கும் இடத்தில் இந்த வகுப்புகள் தேவையில்லை. அல்லது பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் வாரத்திற்கு சில மணி நேரத்தை கல்வி ஒளிபரப்புக்கு ஒதுக்கச்சொல்லி அரசு கேட்டுக்கொள்ளலாம். 

அல்லது சில மாதங்களுக்கு அப்படியே விடலாம். உறுதியாகச் செல்கிறேன் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. அல்லது மூளை அழுகிவிடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார் எழுத்தாளரும், ஆசியருமான அழகிய பெரியவன்..