அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…? குழப்பத்திலேயே இருப்பாரா செங்கோட்டையன் ..?

தனியார் பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகள் நடத்திவரும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்த கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் இதனை வாபஸ் பெற்றுள்ளார்.


அரசு பள்ளி குழந்தைகள் கையில் எப்படி ஸ்மார்ட் போன் இருக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டதும், தொலைக்காட்சியில் பாடங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். பாடம் நடத்துவது சரி, அதனை பார்க்க வைப்பது யார், அதில் இருந்து என்ன அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்தது.

தமிழகத்தில் 87 சதவீத வீடுகளிலும் தொலைக்காட்சிகள் இருக்கின்றன என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அரசுப் பள்ளிகளில் பயில்கிற மாணவர்களில் தமிழகத்தில் தொலைக்காட்சி இல்லாத அந்த 13 சதவீத வீடுகளின் குழந்தைகள் இருப்பார்களானால், அவர்களைக் கைவிட்டுவிடலாமா?

ஆசிரியர்களும் குழந்தைகளும் முகத்துக்கு முகம் பார்த்து உரையாடுகிற வகுப்பறை அனுபவம் வேறு எதிலும் கிடைக்காது. ஒவ்வொரு குழந்தையின் தன்மை, திறமை, குடும்பச்சூழல் ஆகியவற்றை அறிந்து ஆசிரியர் வகுப்பெடுப்பார். முகம் வாடியிருக்கும் குழந்தையின் பிரச்சினையைக் கேட்டறிந்து ஆறுதலளித்து பாடங்களைச் சொல்வார். எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரியாக அணுகுகிற ஆன்லைன் வகுப்புகளால் இது சாத்தியமாகுமா? எந்திரத்தனமான பயிற்சி குழந்தைகளின் கல்வி வளர்ச்சியாகுமா?

கல்வி என்பது பாடப்புத்தகத்தின் முன்பக்க-பின்பக்க அட்டைகளுக்கு இடையே அச்சிடப்பட்டுள்ள தகவல்கள் மட்டுமல்ல. கேள்விகளால் வளர்வதே உண்மையான கல்வி. வகுப்பறையில் கேள்வி கேட்கிற மாணவர்கள் சிறப்பான கல்வி பெறுகிறார்கள். ஆன்லைனில், தொலைக்காட்சியில் யாரிடம் எப்படி கேள்வி கேட்பது என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 

அரசு பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துபேசி, மாணவர்களை ஒருங்கிணைத்து பாடம் நடத்தும் வழியை ஆராயவேண்டுமே தவிர, நான் நடத்துகிறேன். விரும்பும் குழந்தைகள் படிக்கலாம் என்று சொல்வது, அரசுக்கு அழகல்லவே.