அண்டை மாநிலங்களில் வெங்காயம் கிலோ 40 ரூபாய், தமிழகத்தில் 150 ரூபாய்! ஆட்சியாளருக்கு அக்கறை இல்லையா?

வெங்காயத்தை உரிக்கும்போதுதான் முன்பெல்லாம் கண்ணீர் வரும். இப்போது வெங்காயம் விற்கும் அநியாய விலையை நினைத்துப் பார்த்தாலே கண்ணீர் வருகிறது என்று ஸ்டாலின் ஆவேசமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோல் போல, வெங்காயமும் இன்று கிடுகிடு விலையை வேகமாக எட்டிப் பிடிக்கும் பொருள்களுள் ஒன்றாக ஆகிவிட்டது அல்லது ஆக்கப்பட்டு விட்டது. இன்றைய விலை நிலவரத்தில் தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோலுக்கு அடுத்து வெங்காயத்தையும் ஊடகங்கள் வெளியிடுகின்றன.

முட்டை ஆம்லெட்டில் வெங்காயத்தை விலக்கிவிட்டு, முட்டைக்கோஸ் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன கடைகள். வெங்காயம் பயன்படுத்துவதால் பிரியாணி விலை கூடிவிட்டது. கடலூரில் இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த ஒரு திருமணத்தில், மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசுப் பொருளாகக் கொடுத்து வாழ்த்திச் சென்றுள்ளார்கள். ஆட்டோவில் ஏறிய ஒருவர், பணத்துக்குப் பதிலாக வெங்காயம் கொடுத்ததாக 'வாட்ஸ்அப்பில்' தகவல் வருகிறது.

வைர நகைகள் மாதிரி, வெங்காயத்தில் நகை செய்வதாக ஒரு விளம்பரம் பார்த்தேன். 'வெங்காயம் வாங்குற அளவுக்கு நீங்க பணக்காரங்களா?' என்கிறது ஒரு 'மீம்ஸ்'. இப்படி வானத்தைத் தொட்டுவிட்டது, வெங்காயத்தின் விலை! இவை நாட்டில் நடக்கும் நகைச்சுவைக் காட்சிகள் அல்ல; நாம் கண்ணெதிரே அன்றாடம் காணும் எதார்த்தமான நிகழ்வுகளாக, உண்மைக் காட்சிகளாக இருக்கின்றன!

மக்கள் தினமும் உண்ணும் உணவில் அவசியம் தவறாமல் பயன்படுத்தும் காய்கறிகளில் மிக மிக முக்கியமானது வெங்காயம். அந்த வெங்காயத்தின் விலை, இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வெங்காயம், ஏழை - எளிய - நடுத்தர மக்களுக்கு எட்டாத அபூர்வமான பொருளாகி விட்டது.

கடந்த நவம்பர் முதல் வாரம், ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனையானது. நவம்பர் 2-வது வாரம் 10 ரூபாய் உயர்ந்து, கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. டிசம்பர் 2-ஆம் தேதி ரூ.110-ஆக உயர்ந்தது. டிசம்பர் இரண்டாவது வாரம் ரூ.140-ஆக உயர்ந்தது. அதன்பிறகு நித்தமும் உயர்ந்து 200 ரூபாய் ஆகிவிட்டது! வெளிச்சந்தை விலைகளைச் சொல்லவே முடியாது. 230 ரூபாய் முதல் 250 வரை ஆகிவிட்டது.

வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் வழக்கத்தை விட மிகக் குறைந்த அளவே வெங்காயம் வாங்கிச் செல்கின்றனர்; பெரும்பாலானோர் வாங்குவதையே நிறுத்திவிட்டார்கள். இந்த விலை உயர்வு ஒரே நாளில் நடந்துவிடவில்லை. தினந்தோறும் உயர்ந்து உயர்ந்து, இன்றைக்கு இவ்வளவு அதிக விலையில் வந்து நங்கூரம் போட்டு நிற்கிறது.

இந்த விலை உயர்வு குறித்து தமிழக அரசு சிறிதேனும் கவலை கொண்டதா? அதனைக் குறைப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா? என வெளியில் தெரியவில்லை. 'இதெல்லாம் நம்முடைய வேலையா?' என்ற அலட்சியத்தில் ஆட்சி நடத்துகிறார்களா?

வெங்காயத்தின் விலை சில மாதங்களாகவே உயர்ந்து வருகிறது. இதற்கு மிக முக்கியமான காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த மழை என்று சொல்லப்படுகிறது. நாசிக்கில் இருக்கும் வெங்காயக் கொள்முதல் சந்தையில் இருந்துதான் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது.

அதிக மழை காரணமாக அங்கு உற்பத்தியும் பாதிக்கப்பட்டது; கொண்டு வரும் பணிகளிலும் முடக்கம் ஏற்பட்டது. எனவே சென்னைக்கு வரும் வெங்காயத்தின் அளவு பாதியாகக் குறைந்தது. இதுதான் இந்த விலை உயர்வுக்குக் காரணம். இது ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சினை அல்ல; மற்ற மாநிலங்களுக்கும் இதே நெருக்கடிதான் என்று முதலமைச்சர் பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால், மற்ற மாநிலங்கள் இந்த நெருக்கடியைப் பெருமளவுக்குச் சமாளித்துவிட்டன.

தமிழகம் வழக்கம்போல, எல்லாவற்றையும் போல, போதிய அளவு வெங்காயம் விநியோகத்திற்குச் செல்வதிலும், வெங்காய விலையை மக்களின் தாங்கும் சக்திக்கேற்ப கட்டுப்படுத்துவதிலும் மிகவும் பின்தங்கி விட்டது. இந்தியா முழுவதும் வெங்காயம் அதிக விலைக்கு விற்றாலும், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் விலை கட்டுக்குள் இருக்கிறது.

வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட, அந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இதனை ஏன் தமிழக அரசால் செய்ய முடியவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.