அனைத்து பாடத்திலும் டாப்! ஒரே ஒரு பாடத்தில் மட்டும் பெயில்! பாத்திமா லத்தீப் தற்கொலை ஏன்?

பாத்திமா லத்தீப் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை ஐஐடியில் எம்ஏ முதலாம் ஆண்டு மனிதம் மற்றும் சமுதாயம் பயின்று வந்தவர் பாத்திமா லத்தீப். இவர் கடந்த வாரம் ஐஐடி வளாகத்திற்குள் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஒரே ஒரு பாடத்தில் தோல்வி அடைந்த காரணத்தினால் பாத்திமா இந்த முடிவை எடுத்துவிட்டதாக கூறினார்கள். 

ஆனால் பாத்திமாவின் செல்போனை ஆராய்ந்த போது அவரது தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. தனது செல்போனில் நோட் எனும் பிரிவில் தனது தற்கொலைக்கு என்ன காரணம் என்பதை பாத்திமா தெளிவுபடுத்தியிருந்தார். ஐஐடியில் தனக்கு பேராசிரியாக உள்ள பத்மநாபன் என்பவர் தான் தனது தற்கொலைக்கு காரணம் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த பதிவை பாத்திமா கடந்த 8ந் தேதி இரவு செல்போனில் பதிவு செய்திருந்தார். மறுநாள் அவர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் தன்னை துன்புறுத்தியதாக மேலும் இரண்டு பேராசிரியர்களின் பெயரையும் செல்போன் நோட் பிரிவில் பாத்திமா குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது.

இதனிடையே சிறு வயது முதலே பாத்திமா படிப்பில் சுட்டி. கேரளாவில் பாத்திமா குடும்பம் மிகவும் வசதியானது என்றும் சொல்கிறார்கள். பனாரசில் படிக்க வாய்ப்பு கிடைத்தும் பெண்ணின் பாதுகாப்பு கருதி தமிழகத்தில் சென்னை ஐஐடியில் படிக்க அவரது தாய் தந்தை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பாத்திமாவும் ஐஐடியில் சேர்ந்தது முதலே நன்றாக படித்துள்ளார். முதல் செமஸ்டரில் அனைத்து பாடங்களிலும் டாப் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் பாத்திமா பெயில் ஆகியுள்ளார். அந்த பாடம் பேராசிரியர் பத்மநாபன் கற்றுக் கொடுப்பது என்று கூறுகிறார்கள். செய்முறைத் தேர்வு ஒன்றின் போது பாத்திமாவுக்கும் – பேராசிரியருக்கும் இடையே வாதம் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.

பேராசிரியர் பத்மநாபன் கூறிய சில கருத்துகளை ஆதாரத்துடன் பாத்திமா நிராகரித்ததாகவும் தன்னையே எதிர்த்து பேசுகிறாயா என்று அப்போதே பத்மநாபன் கோபப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதனை அடுத்து வெளியான தேர்வு முடிவில் தான் பாத்திமா பெயில் ஆகியுள்ளார். மேலும் இதனை குறிப்பிட்டு பாத்திமாவை மிகவும் நோகடிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் கூறுகிறார்கள்.

இதனால் ஏற்பட்ட மன உலைச்சல் மற்றும் பத்மநாபன் இருக்கும் வரை தான் எம்ஏ பாஸ் ஆக முடியாது என்கிற எண்ணத்தில் பாத்திமா இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டதாக சொல்கிறார்கள்.