சிவபெருமானுக்கு ரயிலில் ஒரு ஸ்பெஷல் சீட்..? சர்ச்சையில் சிக்கிய காசி எக்ஸ்பிரஸ்

நாட்டில் இந்துக் கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களை ஒருங்கிணைப்பதற்காக காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை பிரதமர் மோடி தொடங்கிவைத்த நேரத்தில், சிவபெருமானுக்கு ஒரு ஸ்பெஷல் சீட் ஒதுக்கப்பட்டதுதான் விவகாரமாக உருவெடுத்துள்ளது.


உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள மூன்று ஜோதிலிங்க ஸ்தலங்களை இணைக்கும் வகையில் காசி மஹாகாள் எக்ஸ்பிரஸ் ரயில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.

பூஜைகள் செய்து தொடங்கிவைக்கப்பட்ட அந்த ரயிலில் இருந்த பி5 பெட்டியில், 64வது எண் கொண்ட இருக்கையில், ஒரு சிறிய சிவன் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த விவகாரம்தான் பெரும் விமர்சனமாக உருமாறியிருக்கிறது.

சிவனுக்காக ஓர் இருக்கை ஒதுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த இருக்கையை ஒரு சிறிய கோயிலை போல் மாற்ற இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியானதும், கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

அதனாலோ என்னவோ, சட்டென்று ரயில்வே தன்னுடைய நிலையை மாற்றி அறிவித்துவிட்டது. அதாவது, ‘புதிய திட்டத்திற்கு பூஜை செய்து ஆசி பெறவே தற்காலிகமாக சிவனின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இது முதல் பயணத்திற்கு மட்டும்தான். அடுத்த பயணங்களில் சிவனுக்கு இருக்கை ஒதுக்கப்படாது’ என்று தெரிவித்துள்ளது.

ரயிலே சிவனுக்குத்தான், அதில் ஒரு சீட்டை மட்டும் ஒதுக்குவதா என்ன?