டெல்லி: ஒன்பிளஸ் ஸ்மார்ட்ஃபோன் தீப்பற்றி எரிந்த விவகாரத்தில், அந்நிறுவனம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
ஸ்விட்ச் ஆஃப் செய்த போது வெடித்துச் சிதறிய ஒன்பிளஸ் செல்போன்! மரண பீதியில் பயன்பாட்டாளர்கள்!

ட்விட்டரில், ராகுல் ஹிமாலியன் என்பவர் கடந்த ஜூலை 3ம் தேதியன்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதாவது, ஒன்பிளஸ் நிறுவனத்தை டேக் செய்து அதனை எழுதியிருந்த ராகுல், அதில், ''எனது ஒன் பிளஸ் ஃபோன் தற்போது 5 ஆண்டுகள் பழமையான மாடலாக உள்ளது. இருந்தாலும், ஸ்விட்ச் ஆஃப் செய்து ஒரு ஓரமாக வைத்திருந்தேன். ஆனால், திடீரென அது தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.
அத்துடன், எனது வீட்டில் ஏசி பயன்பாட்டில் உள்ளது. அறையின் வெப்பநிலை 19 டிகிரி செல்சியாக இருந்தது. இப்படி இருந்தும், ஒன் பிளஸ் ஃபோன் தீப்பற்றி எரிந்து நாசமான சம்பவம் எனக்கு அதிர்ச்சியை தருகிறது. ஒருவேளை பாக்கெட்டில் வைத்திருந்தால், இந்த ஃபோன் வெடித்து எனக்கு ஏதேனும் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.
இப்படி நடப்பதற்கு, எதோ உற்பத்தி குறைபாடுதான் காரணம் என சந்தேகிக்கறேன். இதுபற்றி ஒன் பிளஸ் நிறுவனம் உரிய பதில் அளிக்க வேண்டுகிறேன், '' என அவர் கூறியிருந்தார். அத்துடன், தீப்பற்றி எரிந்த ஒன் பிளஸ் ஃபோனின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.
இதற்கு ஒன் பிளஸ் நிறுவனம் உடனடியாக பதில் அளித்துள்ளது. அத்துடன் இந்த விசயத்தை உரிய கவனம் செலுத்தி விசாரிக்க தொடங்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நபரை நேரில் சந்திக்க, தொழில்நுட்ப குழு ஒன்றை அனுப்ப உள்ளதாகவும், ஒன் பிளஸ் குறிப்பிட்டுள்ளது.