18 டன் எரிவாயுவுடன் கவிழ்ந்த லாரி! 5 மணி நேரம்! 50 பேர்! உயிரை பணயம் வைத்து நிகழ்த்திய மீட்பு பணி! மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த எரிவாயு லாரி அசம்பாவிதம் நிகழ்வதற்குள் மீட்கப்பட்டது. 18 டன் எரிவாயுவுடன் பள்ளத்தில் கிடந்த டேங்கர் லாரி 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டது.


தனியார் எல் பி ஜி கேஸ் கம்பெனியில் இருந்து ஓசூர் நோக்கி எரிவாயு நிரப்பப்பட்ட லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சேகர் என்பவர் ஓட்டி சென்றார். சுமார் 18 டன் எரிவாயுடன் சென்று கொண்டு இருந்த அந்த லாரி வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அருகே இன்று காலை வரும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. நிலை தடுமாறி சென்ற லாரி வெட்டுவானம் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள 10 அடி பள்ளத்தில் தலை கீழாக கவிழ்ந்தது. 

லாரி பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் தகவலை பள்ளிகொண்டா காவல் துறையினர் மற்றும் குடியாத்தம் தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை மீட்கும்பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக தேசிய நெடுஞ்சாலை மீட்பு பணியாளர்களும் ஈடுபட்டனர். சுமார் 50 பேர் மற்றம் 4 க்ரேன் வாகன உதவியுடன் 5 மணி நேரம் போராடி டேங்கர் லாரியை பத்திரமாக மீட்கப்பட்டது.

இதனிடையே எரிவாயு லாரி என்பதால் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்புக்காக அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. சில சமயங்களில் பெட்ரோல் ஏற்றிச் செல்லும் லாரிகள் விபத்தில் சிக்கும்போது அதில் உள்ள எரிபொருள் சாலையில் கசியத் தொடங்கும். உடனடியாக நம்மவர்கள் அந்த எரிபொருளை பாலாக நினைத்து தங்கள் வீட்டில் இருந்து பாத்திரங்களை எடுத்து சென்று நிரப்ப தொடங்கி விடுவர்.

இது போன்ற சம்பவங்களில் லாரி தீப்பிடிக்கும் போது அதில் இருந்து மீள முடியாமல் பரிதாபமாக நூற்றுக் கணக்கான மக்கள் தீயில் கருகி உயிரிழந்து விடுவர். சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற இதுபோன்ற சம்பவத்தில் 140 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போலத்தான் எரிவாயு ஏற்றிச் செல்லும் லாரியும் கசிவு ஏற்பட்டால் அருகில் உள்ளவர்கள் அனைவரும் தீ விபத்தில் சிக்கி விடுவர்.