தூக்கில் தொங்கிய மருமகள் உடலில் காயங்கள்! மாமனாரிடம் போலீசார் விசாரணை!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் செவிலியர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சூலூர் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் பாண்டி மீனா என்பவருக்கும் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பாண்டிமீனா பல்லடம் அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். முரளி மற்றும் பாண்டி மீனா ஆகிய இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் முரளி வீட்டார் பாண்டி மீனாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளதாகவும் இதன் பெயரில் பாண்டி மீனா கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது வீட்டில் இருந்து 4 லட்சம் ரூபாய் வரை வாங்கி வந்து தன் கணவரிடம் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் கணவர் முரளி வீட்டில் இல்லாதபோது பாண்டி மீனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. வீடு திரும்பிய முரளி பாண்டி மீனா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ந்து உடனே அவரை காப்பாற்ற கீழே இறக்கியதாகவும் ஆனால் அவர் இறந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

ஆனால் பாண்டி மீனாவின் பெற்றோர்கள் இரவோடு இரவாக முரளியின் வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும் இது தற்கொலை அல்ல கொலை எனவும் பாண்டி  மீனாவின் பெற்றோர்கள் முரளி வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாண்டி மீனா உடலில் காயங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன பாண்டி மீனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாண்டி மீனாவின் கணவர் மற்றும் அவரது மாமனாரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.