அக்கா மகளை விரட்டி விரட்டி வெட்டிய தாய் மாமன்! நிச்சயம் முடிந்த பிறகு வேறு ஒருவருடன் பழகியதால் விபரீதம்!

மருத்துவமனையில் வைத்து செவிலியரை அரிவாளால் வெட்டிய தாய்மாமன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காஞ்சிபுரத்தில் நிகழ்ந்துள்ளது.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஜெயந்தி என்பவர் செவிலியராக பணியாற்றி வந்தார். சனிக்கிழமை அன்று வழக்கம்போல் அவர் தனது பணியை செய்து கொண்டிருக்க, மது போதையில் உள்ளே நுழைந்த ஒரு இளைஞர் செவிலியரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். வெட்டுப்பட்டு சரிந்து விழுந்த அந்த செவிலியரை அங்கு இருந்த சக ஊழியர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த செவிலியரை வெட்டியது அவரது தாய்மாமன் முத்து என்பதை கண்டுபிடித்தனர். இதை அடுத்து முத்துவை அவர்கள் தேடிச் சென்றனர். ஆனால் முறைப்பெண்ணை வெட்டிய கையோடு அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து முத்துவும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தனது முறை பெண்ணை அவர் பலமுறை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் திருமணத்திற்கு செவிலியர் மறுக்கவே தாய்மாமன் முத்து மதுபோதையில் சென்று அவரை வெட்டி இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் தற்போது சிகிச்சை பெற்று வரும் முத்து சிகிச்சை முடிந்தவுடன் கைது செய்யப்பட உள்ளார்.

இதனிடையே நர்ஸ் ஜெயந்திக்கும் தாய் மாமன் முத்துக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்ததாக கூறுகிறார்கள். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் ஜெயந்தி வேறு ஒருவருடன் பழகியதை கண்டுபிடித்த ஆத்திரத்தில் முத்து இப்படி செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.