அசாம் மக்களை மிரட்டும் NRC எனும் தேசிய குடிமக்கள் பதிவேடு! அப்படி என்றால் என்ன? ஏன்? எதற்கு?

அசாமியில் வெளியாகியுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு தான் தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்படும் ஒரு தலைப்புச் செய்தியாகியுள்ளது.


இந்த என்ஆர்சி என்றால் என்ன? ஏன் கொண்டுவரப்பட்டது? அதனை பாஜக ஆதரிப்பது எதற்கு என்பததை விளக்கவே இந்த கட்டுரை. அசாமில் முதன் முதலில் தேசிய குடிமக்கள் பதிவேடு 1951ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இதன் பிறகு அவ்வப்பபோது இந்த பதிவேடு புதுப்பிக்கப்பட வேண்டும் . ஆனால் 1951ஆம் ஆண்டுக்குப் பிறகு அது புதுப்பிக்கப்படவில்லை. 

1970களில் வங்கதேசப் போருக்கு பின் ஏராளமான வங்கதேச முஸ்லீம்கள் அசாமில் குடியேறினர். இப்படி ஏராளமான வங்கதேச முஸ்லீம்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்று வாழ ஆரம்பித்தனர். இதனால் இந்தியர்கள் – வங்கதேச முஸ்லீம்களை அடையாளம் காணத்தான் தேசிய குடிமக்கள் பதிவேடு அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் 1971ம் ஆண்டுக்கு பிறகு இந்த விஷயத்தை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால் வங்கதேச முஸ்லீம்கள் இந்திய குடிமக்களான பிறகு காங்கிரஸ் வாக்கு வங்கிகளாக இருந்து வந்தனர். இந்த சூழலில் 1979ஆம் ஆண்டு வங்கதேச முஸ்லீம்களுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.

அசாம் கனபரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் சில இந்து அமைப்புகள் வங்கதேச முஸ்லீம்களை அவர்களின் நாட்டுக்கே திருப்பி அனுப்ப வலியுறுத்தினர். இந்த சூழலில் 1983ஆம் ஆண்டு அசாம் தேர்தலில், வங்க தேசத்தை பூர்விகமாகக் கொண்ட, ஆனால் அசாமில் குடியேறி பல காலமாக வசிக்கும் 40 லட்சம் பேருக்கு வாக்குரிமை அளிப்பது என இந்திரா காந்தி அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அசாம்வாசிகளை கொந்தறிக்கச் செய்தது. அப்போது தான் நெல்லி படுகொலைகள் அரங்கேறின. அதாவது அசாமின் நகாவோன் மாவட்டத்தில் நெல்லி உள்ளிட்ட 14 கிராமங்களில் 1983ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி காலையில் வன்முறை கும்பல் புகுந்தது.

அடுத்த 6 மணி நேரத்திற்குள் அங்கு 2 ஆயிரத்து 191 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருமே வங்கதேச முஸ்லீம்கள். இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், பிரிட்டிஷ் இந்தியாவில், பிரிவினைக்கு முன்னர் அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இதன் பிறகே வெளிநாட்டவர்களை அடையாளங்கண்டு அசாமில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியது. அந்த வகையில் னவே, சட்டவிரோத குடியேற்றம் மூலம் அசாமில் தஞ்சம் அடைந்த வங்கதேச முஸ்லீம்களை அடையாளம் காண 1971 மார்ச் 25 நிர்ணயிக்கப்பட்டது. 

ஏன் என்றால் அந்த தேதியில் தான் வங்கதேசப் போர் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு வங்கதேசத்தில் இருந்து அசாமில் குடியேறியவர்கள் வெளிநாட்டவராக வரையறுக்கப்பட்டனர். இதன் பின்னர் தேசிய குடியுரிமை பதிவேடு கணக்கெடுப்பு தொடங்கினாலும் சிறுபான்மை மக்களின் போராட்டம் மற்றும் இளைஞர்களின் கடும் எதிர்ப்பால் எந்த அரசாலும் இதனை செய்ய முடியவில்லை. 

ஆனால் 2013ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்ட பின்னரே, தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பித்து 2019 ஆகஸ்ட் 31க்குள் வெளியிட= உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த பணியில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக 52 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அசாமில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இடம்பெற வேண்டுமானால், 1951ஆம் ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டிலோ அல்லது 1971ஆம் ஆண்டு மார்ச் 24-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலிலோ பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயர் இருந்திருக்க வேண்டும்.

அப்படி இல்லாதவர்களை வங்கதேசத்திற்கு அனுப்ப வேண்டும் என்பது திட்டம். ஆனால் வங்கதேசம் அப்படிப்பட்டவர்களை ஏற்குமா என்பது சந்தேகம். அவர்களை மீண்டும் வங்கதேசத்திற்கே அனுப்புவதற்கான ஒப்பந்தம் இந்தியா-வங்கதேசம் இடையே இல்லை. இதனால் இந்திய குடிமக்கள் இல்லை என்கிற முடிவுக்கு வந்தாலும் அவர்களை இங்கேயே தான் வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.