இவனுங்க கையை மட்டும் உடைச்சா போதுமா! போலீஸ் கையையும் உடைக்கணும்!

செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் வயதைப் பார்த்தாலே பகீரென்று இருக்கிறது.


எல்லோருமே கிட்டத்தட்ட 20 வயது சொச்சம்தான். இந்த வயதில் இவர்கள் இப்படி வழிப்பறி கொள்ளையர்களாக மாறுவதற்குக் காரணம், பெரும்பாலும் ஆடம்பர மோகம். குறிப்பாக செல்போன் மோகம். 50 ஆயிரத்துக்கு மேல் விலையுள்ள செல்போன் வைத்திருப்பதுதான் கெத்து என்று பலரும் நினைக்கிறார்கள். அதனால் ஒன்றுக்கு இரண்டு பேர் கூட்டு சேர்ந்து பெண்களின் கழுத்தில் இருக்கும் செயினை அறுத்து விற்பது மிகவும் எளிய வழியாக மாறிவிடுகிறது. 

இவர்களை பிடித்து ஜெயிலில் போடுவதால் எதுவும் மாறிவிடுவதில்லை. உள்ளே போய் மேலும் கொஞ்சம் டிரெயினிங் எடுத்துக்கொண்டு வந்து, பெரிய அளவுக்கு ஈடுபடுகிறார்கள். அதனால்தான், கடந்த ஒரு வருடமாக காவல் துறை புதிய ஆக்ஷன் அவதாரம் எடுத்தது. 

அதன்படி, கைது செய்யப்படுபவர்கள் பாத் ரூமில் வழுக்கி விழும் சம்பவம் அதிகரித்தது. போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அயோக்கியர்களின் கை, கால்கள் உடைக்கப்படுகிறது. அதன்பிறகு குளிக்கும்போது வழுக்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது.

எப்படி கை உடைந்தது என்று போலீஸ்க்கும், மக்களுக்கும் நன்றாகவே தெரிகிறது, ஆனால் இந்தத் தண்டனையை சாதாரண திருடர்களுக்கு மட்டும் கொடுத்தால் போதாது. பெரிய அளவுக்கு  ஊழல் செய்து சிறைக்கு வரும் அரசியல்வாதிகள், லஞ்சம் வாங்கும் போலீஸ்காரர்கள், ஊழல் பெருச்சாளிகள் என எல்லோருக்கும் இதனை செய்யும் துணிவு போலீஸ்க்கு வர வேண்டும். அப்போதுதான், தாங்கள் செய்வது நியாயம் என்று போலீஸ் நெஞ்சை நிமிர்த்த முடியும்.