பணம் கொடுத்தாலும் இனி ஓட்டு இல்லை! ஆளும் கட்சிக்கு சூடு வைத்த சாமான்யர்கள்!

மதுரையில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், நான் பணம் வாக்காளர்களுக்குக் கொடுக்கப் போவதில்லை என்று உறுதியுடன் அறிவித்து, அதை நிறைவேற்றவும் செய்தார். அவரைப் போன்று பெரும்பாலான காங்கிரஸ்காரர்களும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கவில்லை.


ஆனால், ஆளும் அ.தி.மு.க. கட்சி தான் நின்ற அத்தனை தொகுதிகளிலும் வஞ்சனை இல்லாமல் மக்களுக்குப் பணம் கொடுத்தது. அ.தி.மு.கவுக்கு இணையாக தி.மு.க.வும் பணம் கொடுத்தது. இவர்களைத் தாண்டி அ.ம.மு.க.வும் பணம் கொடுத்தது.

ஆனால், மக்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் ஆச்சர்யம். யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொண்டார்கள். ஆனால், ஓட்டு மட்டும் தங்கள் இஷ்டத்துக்குப் போட்டார்கள். ஆம், இந்தத் தேர்தலில் சகல கட்சிகளிடம் இருந்தும் கணிசமான பணத்தை வாங்கிக்கொண்டு, தங்கள் மனதுக்குப் பிடித்த கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள் மக்கள்.

இதை எப்படி உறுதியாக சொல்லமுடிகிறது என்றால், நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் எங்கேயும் யாருக்கும் பணம் தரவில்லை என்றாலும், அவர்கள் மதிப்புக்குரிய கணிசமான வாக்குகள் வாங்கியிருக்கிறார்கள். ஆக, பணம் கொடுத்தால்தான் மக்கள் ஓட்டுப் போடுவார்கள் என்பதும் தவறு, பணம் வாங்கிவிட்டால் நிச்சயம் மனசாட்சிக்குப் பயந்து ஓட்டுப் போடுவார்கள் என்பதும் தவறு என உறுதியாகியிருக்கிறது.