பத்தாம் வகுப்புக்கு தேர்வு வேண்டவே வேண்டாம்..! மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.

கொரோனா பெருந்தொற்று நோய் மற்றும் பொதுமுடக்கம், முழு சமூகத்தின் உடல் நலம் மற்றும் மன நலனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதனால் 10ம் வகுப்புக்குத் தேர்வு வைக்கவே வேண்டாம் என்று மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. நமது நாட்டில் மூன்றாம் மாதத்தை எட்டியுள்ள நிலையில் பொதுமுடக்கமானது, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஏழைகள், ஆதரவற்றோர், சமூக பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்டோர், மற்றும் சிக்கலான குடும்ப சூழலில் வாழ்ந்து வரும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் ஆகியோர் கடுமையான தாக்கத்திற்கு ஆளாகி உள்ளனர்

உடல்ரீதியான, வாய்மொழி மற்றும் உணர்வு ரீதியான வன்முறை, குடும்ப வன்முறை, குடும்ப உறுப்பினர்களிடையே குடிப்பழக்கத்தினால் ஏற்படும் சிக்கல்கள், ஆகியவற்றுடன் நோய் குறித்த பீதி மற்றும் பதற்றமும் இணைந்து, குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு தீவிரமான மனநல சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி, அதிகரித்து வரும் வறுமை, ஆகிய பொருளாதார சிக்கல்கள் ஏற்கனவே இருந்து வரும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளை இரட்டிப்பாக்கி உள்ளன.

கிராமப்புறத்தைச் சார்ந்த குடும்பங்கள், வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், மேலும் இத்தகைய குடும்ப சூழ்நிலையில் வாழும் மாணவர்கள் ஆகியோரின் வாழ்க்கை பெருநதொற்று பொது முடக்கத்தால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது. பொது முடக்கத்தின் சமூக மற்றும் பொருளாதார தாக்கத்தினால் ஏற்படும் மனநலச்சிக்கலை சரியாக அணுகாவிட்டால்,

தனிநபரின் மனநிலை ஆரோக்கியத்தை பாதித்து அவரை நீண்ட கால வளர்ச்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் முந்தைய மனநல பிரச்சினைகளுடன் இருக்கும் வளர் இளம் பருவத்தினர் கடுமையான மனநல நெருக்கடிக்கு ஆளாகி அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையும் ஏற்படும்.

யுனெஸ்கோ அறிக்கையில் ஏப்ரல் 8, 2020 நிலவரப்படி உலகில் 188 நாடுகள் கல்வி நிலையங்கள் மூடியுள்ளன இதனால் கல்வி பெற்று வந்த 90 சதவீதத்திற்கும் மேலான மாணவர்கள் கல்வி இன்றி உள்ளனர். கொரோனா வைரஸ் பெரும் தோற்று நோயயினை எதிர்கொள்ள பல்வேறு நாடுகள் நடைமுறைப்படுத்தி உள்ள சமூக இடைவெளி நடவடிக்கைகளால், வளர் இளம் பருவத்தினரின் அன்றாட வாழ்வுமுறை சீர்குலைந்துள்ளது.

இத்தகைய சூழலில் தமிழக அரசானது, பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ஜூன் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என்று அறிவித்துள்ளது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதுமுள்ள 9.44 லட்சம் மாணவர்கள், பெரும் தொற்று சூழலில் எழுத வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது அவற்றுள் 4.07 லட்சம் மாணவர்கள் அதாவது 50 சதவீதம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை சேர்ந்தவர்களாவர். உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1.45 லட்சம் மாணவர்களும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 91,918 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 6.45 லட்சம் மாணவர்கள் பெரும்பாலானோர் சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை குடும்பங்களைச் சார்ந்தவர்கள். ஏற்கனவே உடல், மனம் மற்றும் உணர்வு ரீதியான அழுத்தங்களைச் சந்தித்து இக்கட்டான சூழலில் இருந்துவரும் இந்த மாணவர்கள், பொதுத்தேர்வு என்கிற கல்விசார்ந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மற்றவர்களைவிட கூடுதலான மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது.

எனவே மக்களுக்கான மனநல மருத்துவர்களின் கூட்டமைப்பு தமிழக அரசிடம் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.

1. குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் இடையே அதிகரித்துவரும் மனநல சிக்கல்கள் மீது உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

2. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே ஏற்படக்கூடிய மன நல்ல சிக்கல்களை அடையாளம் கண்டு,ஆராய்ந்து, சிகிச்சை மற்றும் நிவாரணங்கள் வழங்குவதற்கான சேவைகளை உருவாக்க வேண்டும்.

3. நிலவி வரும் பெருந்தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மாணவர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் நலன் கருதி 2019- 20 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று மக்களுக்கான மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மருத்துவர்கள் அரவிந்தன், குருமூர்த்தி, கார்த்திக் தெய்வநாயகம், அபிராமி மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.