ரயில் டிக்கெட் கேன்சல் செஞ்சா, சேவை கட்டணம் பிடித்தம் இல்லை... நாடுமுழுவதும் வருகிறது 150 தனியார் ரயில்கள்.

கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை சுமார் 65 லட்சத்து 68 ஆயிரம் ரயில் முன்பதிவுகள் தக்க காரணமின்றி கேன்சல் செய்யப்பட்டுள்ளதாகவும். மாதத்திற்கு சராசரியாக 8 லட்சம் டிக்கெட் புக்கிங் பல்வேறு காரணங்களால் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளது இந்திய ரயில்வே துறை.


மத்திய பிரதேசம் நீமச் மாவட்டத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் என்பவர் எழுப்பியிருந்த கேள்விக்கு. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது ரயில்வே நிர்வாகம். மேலும் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்வதால் பண்டிகை நாட்களில் 150 சதவிகிதத்திற்கும் அதிகமாக டிக்கெட் புக்கிங் ஆவதாகவும். வேறு வழியின்றி தானியங்கி முறையில் இந்த டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, இதுபோன்ற சூழலில் கேன்சல் செய்யப்படும் பயணிகளுக்கு 100 சதவிகித தொகை உடனடியாக வழங்கப்படுவதாகவும். சேவை கட்டணங்கள் எதுவும் பிடித்தம் செய்யப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளது இந்திய ரயில்வே துறை. அப்படி கட்டணங்கள் பிடித்தம் செய்யப்படும் பட்சத்தில் அந்தந்த ரயில்வே அலுவலங்களில் புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளது ரயில்வே நிர்வாகம்.

அடுத்த 12 ஆண்டுகளில் சுமார் 50 லட்சம் கோடி முதலீடு என்ற இலக்குடன் பயணிக்க தயாராக உள்ள இந்திய ரயில்வே துறை தான் உலகிலேயே அதிக தொழிலாளிகளைக் கொண்ட துறை என்பது கூடுதல் தகவல். இந்நிலையில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சரியான முறையில் பயணச் சீட்டு வழங்கவே முடியாத நிலையில் இருக்கும் இந்திய ரயில்வே துறையை நினைத்து வேதனையில் உள்ளதாக தெரிவித்துள்ளார் சந்திரசேகர்.

இந்தியா முழுவதும் பல ரயில் தடங்களை‌ தனியாருக்கு தாரை வார்க்க அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்தியாவின் முதல் தனியார் ரயில் லக்னோ - டெல்லி, இடையே இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் 150 தனியார் ரயில்களை இயக்க முடிவெடுத்து, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோத்பூர், மும்பை, டெல்லி, செகந்தராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும், தாம்பரத்தில் இருந்து திருச்சி, நெல்லை, மதுரை, கன்னியாகுமரி பெங்களூரு என 11 தனியார் ரயில்கள் தமிழகத்தின் இயக்கப்படவுள்ளன. 

மணியன் கலியமூர்த்தி.