செம்மொழிக்கு இவ்வளவுதான் மரியாதையா..? மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பும் ராமதாஸ்.

சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.


செம்மொழி நிறுவனத்தை மறைமுகமாக மூடுவதற்கான இந்த திட்டம் கண்டிக்கத்தக்கது என்று நீண்ட நாட்கள் கழித்து ராமதாஸ் குரல் கொடுத்துள்ளார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மூடுவதற்காக மத்திய அரசு கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக இணைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

அதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி தான் முதன்முதலில் குரல் கொடுத்தது. அதனால், தமிழகத்தில் எழுந்த அரசியல் எழுச்சியைத் தொடர்ந்து, அத்தகைய திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்று அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜாவ்தேகர் தெரிவித்தார். அத்துடன் இச்சிக்கல் முடிவுக்கு வந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், புதிய கல்விக் கொள்கை மூலம் மீண்டும் இச்சிக்கலை எழுப்பியிருப்பதன் மூலம், செம்மொழி நிறுவனத்தை மூடுவதில் மத்திய அரசு எவ்வளவு தீவிரம் காட்டுகிறது என்பதை அறியலாம்.

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது; அது தேவையற்றதும் ஆகும். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை பிற கல்வி நிறுவனங்களுடன் ஒப்பிடுவதே தவறு ஆகும். செம்மொழி நிறுவனம் என்பது குறித்து தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்தும், அதன் பழமை குறித்தும் ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும்.

அது தனித்து செயல்பட்டால் தான், அந்த அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். இன்னும் கேட்டால் நிதி, கட்டமைப்பு உள்ளிட்ட எந்த வித தடையும் இல்லாமல் தமிழாய்வு நடைபெற வேண்டும் என்பதால் தான், செம்மொழி தமிழ் உயராய்வு மையம் என்ற பெயரில் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வந்த இந்த அமைப்பு, பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு தரம் உயர்த்தப்பட்டு 2008-ஆம் ஆண்டு மே 19 முதல் செம்மொழி தமிழாய்வு நிறுவனமாக சென்னையில் செயல்பட்டு வருகிறது.

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் தமிழ் மொழி குறித்து ஆய்வு செய்பவர்கள் பிற புலங்களுடன் இணைந்து ஆய்வு செய்வதற்கான வாய்ப்புகளோ, தேவையோ இல்லை. பிற மொழிகளின் பழமை மற்றும் சிறப்பு குறித்த ஒப்பீட்டாய்வு, தமிழின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை படைத்தல் போன்றவை தான் தமிழ் சார்ந்து, பிற புலங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுகள் ஆகும்.

இவை அனைத்திலும் தமிழ் தான் முதன்மையாக இருக்கும். இதற்காக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை தனித்த மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தி, அதில் தமிழ் ஆராய்ச்சிக்கு தேவையான பிற புலங்களை உருவாக்குவது தான் பொருத்தமாக இருக்குமே தவிர, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை பிற பல்கலைக்கழகத்துடன் இணைப்பது எந்த வகையிலும் தமிழ் ஆராய்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் வழி வகுக்காது. மாறாக, தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தனித்துவத்தை சிதைத்து விடும்.

செம்மொழி தமிழாய்வுக்காக இருக்கும் மத்திய நிறுவனத்தை மூட வேண்டும் புதிய கல்விக் கொள்கையில் கூறியிருக்கும் மத்திய அரசு, அதே ஆவணத்தில் பிற பல்கலைக்கழகங்களில் செம்மொழி நிறுவனத்திற்கு இணையான சமஸ்கிருத மொழித் துறையை அதிக எண்ணிக்கையில் தொடங்கப் போவதாகவும் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் 3 சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களை மத்தியப் பல்கலைக்கழகங்களாக மத்திய அரசு தரம் உயர்த்தியது. இப்போது மத்திய பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதத்திற்காக தனித்துறைகளை உருவாக்குகிறது. ஆனால், தமிழுக்கு மட்டும் இருக்கும் ஒரே ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைத்து விட்டு, தனித்த ஆராய்ச்சிக்கு மூடுவிழா நடத்த வேண்டுமாம். மொழிக்கு ஒரு நீதி என்பது எவ்வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.