மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு இல்லையா..? கொதிக்கும் மருத்துவர்கள் சங்கம்.

அகில இந்திய தொகுப்பு இடங்களில் இந்த ஆண்டு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் கூறியிருக்கிறார்.


அனைத்து மாநில அரசுகளிடமிருந்தும் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பிலும், முதுநிலை மருத்துவம் மற்றும் முதுநிலை பல் மருத்துவப் படிப்பிலும் அகில இந்தியத் தொகுப்புக்கு இடங்களை மத்திய அரசு பெற்றுவருகிறது.

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் 50 விழுக்காடும் அகில இந்தியத் தொக்குப்பிற்கு தாரை வார்க்கப்படுகிறது.

மாநில அரசுகள் வழங்கும் இந்த இடங்களில் 2008 ஆம் ஆண்டு முதல்,இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய 27 விழுக்காடு இட ஒதுக்கீடு இது வரை வழங்கப்படவில்லை.இது சமூக நீதிக்கு எதிரானது.இதனால் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மிகப் பெரும் இழப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த அநீதியை எதிர்த்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஏற்கனவே மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த நட்டா அவர்களையும், தற்போதைய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அவர்களையும் நேரில் சந்தித்து இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தக் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன.ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.இந்நிலையில், இந்த இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.இதனால், இந்த கல்வியாண்டில் இளநிலை மருத்துவப் படிப்பிலும் இந்த இட ஒதுக்கீடு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.இது சமூக நீதிக்கு எதிரானது.கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.