இந்தியை எதிர்க்கும் தலைவர்களே உங்களுக்கு தெரியுமா? தமிழ் படிக்கவே ஆளைக் காணோம்!

மும்மொழிக் கொள்கை திணிக்கப்படுவதாக தலைவர்கள் ஆளாளுக்கு இன்று அறிக்கை விட்டு வருகிறார்கள். அந்த தேசிய வரைவுக் கொள்கையில் இருப்பது இதுதான்.


தேசிய வரைவு கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மொழிக்கல்வி குறித்த பத்தியில், ஆறாம் வகுப்பு படிக்கையில் மாணவர்கள் தாங்கள் கற்கும் மூன்று மொழிகளில் ஒன்றை மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு மொழியை மாற்றிக் கற்றுக்கொள்ள விரும்பும் இந்தி பேசும் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் இந்தி, ஆங்கிலத்தோடு இந்தியாவின் பிற பகுதியில் வழங்கிவரும் நவீன இந்திய மொழியொன்றை கற்க வேண்டும்.

இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளூர் மொழி, இந்தி, ஆங்கிலத்தைப் பயில வேண்டும். நடுநிலைப்பள்ளியில் வேறு மொழியைத் தேர்வு செய்யும் மாணவர்கள் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு மூன்று மொழிகளிலும் (ஒரு மொழியை இலக்கிய அளவில்) தங்களுக்கு இருக்கும் திறமையை எதிர்பார்க்கிற அளவுக்கு வாரியத்தேர்வில் நிரூபிக்க வேண்டும்.

இந்தத் தேர்வு வாரியத் தேர்வுகள் ஒரு மாணவரின் அடிப்படை மொழியறிவையே சோதனை செய்வதாலும், ஒரு மொழியில் அடிப்படை அறிவைப் பெற நான்காண்டுகள் போதும். ஆகவே, ஆறாம் வகுப்பில் வேறு மொழியைத் தேர்வு செய்து கற்பதை மாணவர் விரும்புவதோடு, ஆசிரியரும், பள்ளிக்கல்வி முறையும் உதவினால் வேறு மொழியைக் கற்க முடியும். மும்மொழிக் கொள்கைக்கு உட்பட்டு நடுநிலைப்பள்ளியில் விரும்பிய கூடுதல் மொழிகளைக் கற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

ஒருவகையில் இது அப்பட்டமான இந்தி திணிப்புதான். ஆனால், ஆங்கில மோகத்தில் சிக்கிச் சீரழிந்துகொண்டிருக்கும் தமிழர்கள் இந்தி மொழி திணிப்பு குறித்து ஆவேசப்படுவதுதான் வேடிக்கை. இன்று தமிழ் மொழியை படிப்பதற்கு யாரும் தயாராக இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் இருக்கும் அரசு மற்றும் தனியார் கல்லூரியில் படிக்கும் மொத்த மாணவர்களில் 10% மாணவர்கள்தாம் ஏதோ கொஞ்சம் பரவாயில்லை எனத் தேறுவார்கள். அவர்களுமே கூட பிழையின்றி எழுதுவார்கள் என்று சொல்லுவதற்கு இல்லை. இப்படித்தான் இருக்கிறது நிலைமை.

இந்த லட்சணத்தில் நம்ம ஆட்கள் இந்தியை படித்தால் என்ன, படிக்காட்டி என்ன? முதலில் பள்ளியில் எல்லா மாணவர்களும் தமிழ் படிக்க வேண்டும் என்று போராடுங்கப்பா...