ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் முடிந்துள்ளது..! விவசாயிகளுக்கு எதுவும் நல்ல செய்தி இல்லையாமே..

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. கரோனா தாக்கத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியை சந்தித்திருக்கும் நிலையில் இந்த கூட்டம் நடந்துள்ளதால் அது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆனால், விவசாயிகளுக்கு எதுவும் நல்ல செய்தி இல்லை என்கிறார் கோபால்ஜி. இந்த கூட்டத்தில் கடன் மறுசீரைமப்பு திட்டத்தில் பெருநிறுவனங்களோடு சிறு, குறு நிறுவனங்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே வாங்கிய கடனுக்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவதோடு, வட்டி விகிதத்தையும் குறைக்க ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது. இதனால், தொழில் நிறுவனங்கள் தங்களை சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும்.

அடுத்து, தங்கத்தின் மீதான வங்கிகளி்ன் கடன் வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியிருக்கிறது. இதுவரை தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சமாக 75 சதவீதம் வரை கடன் வழங்கிவந்ததை இனி 90 சதவீதம் வரை கடன் வழங்க அனுமதியளித்துள்ளது. மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்க இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

அதே நேரம், விவசாயம் சார்ந்த நகைக்கடன்களுக்கு இந்த கடன் வரம்பு உயர்வு பொருந்தாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. விவசாயம் சார்ந்த நகைக்கடனுக்கு வட்டி குறைவு என்பதால் வங்கிகள் நிதிச்சுமையை குறைக்க இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், பருவமழை சாதகமாக உள்ள இந்த நேரத்தில், நாடு முழுவதும் விவசாயம் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. அதிகப்படியான பரப்பளவில் விவசாயம் நடக்கும்போது அதற்கான முதலீடு தேவை அதிகரிக்கும். அப்போது விவசாயி வெளியில் கடன் வாங்குவதைவிட ஏற்கனவே அடமானம் வைத்த தங்கத்தை மீட்டு, மீண்டும் அடகு வைத்து கூடுதல் கடன்பெற வாய்ப்பு ஏற்படும்.

அதனால், விவசாயம் தங்குதடையின்றி நடக்கும். அதிக விளைச்சல், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும். இன்றைய சூழலில் அது அவசியமும்கூட. விவசாயம் சார்ந்த நகைக் கடனுக்கு கடன் வரம்பை உயர்த்தாவிட்டால், கூடுதல் கடனுக்காக, விவசாயிகள் வங்கியில் இருக்கும் நகைகளை மீட்டு, வெளியில் தனியார் நிதி நிறுவனங்கள் அல்லது அடகு கடைகளில் அடகு வைப்பார்கள்.

அவர்களுக்கு வங்கிகளைவிட அதிக வட்டிக்கு கடன்தரும் தனியார் நிதிநிறுவனங்கள், அடகுகடை முதலாளிகள், விவசாயிகள் தங்களிடம் அடகு வைத்த நகையை அவர்கள் மீண்டும் வங்கியில் அடகுவைத்து குறைந்த வட்டியில் கடன் பெறுவார்கள்.

இதனால், சாமானியர்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக கொண்டுவந்த ரிசர்வ் வங்கியின் இந்த திட்டம், தனியார் நிதிநிறுவனங்கள், அடகுக்கடை உரிமையாளர்களுக்கு சாதகமாகிவிடும். அப்படியில்லாமல் விவசாயம் சார்ந்த நகைக்கடனுக்கும் தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் என்றால், விவசாயிகள் தனியார் நிதிநிறுவனங்களை நாடுவது குறையும். குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் கிடைக்கும்.

அது விவசாயத்தை பெருக்கி, உணவுப் பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும். அதற்காகவாவது, ரிசர்வ் வங்கி தங்க கடன் உச்சவரம்பு விவகாரத்தில் அதன் கொள்கையை மறுபரிசீலனை செய்வது நல்லது என்று குறிப்பிட்டுள்ளார்.