சசிகலா, தினகரனுக்கு அ.தி.மு.க.வில் நோ என்ட்ரி... உறுதி கொடுத்த அமைச்சர்.

அமித் ஷா தமிழகம் வந்துசென்ற தினத்தில் இருந்து தமிழகம் முழுவதும் எழுந்திருக்கும் ஒரு கேள்வி, சசிகலாவை அ.தி.மு.க. கூட்டணியில் இணைக்கும் முயற்சி நடக்கிறதா என்பதுதான். இந்த விஷயத்தை தெரிந்துகொள்ள பலரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.


இந்த நிலையில் இன்று, பா.ஜ.க தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவியிடம் அ.தி.மு.க கூட்டணியில் சசிகலா மற்றும் அ.ம.மு.க இணைக்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ சசிகலாவின் பலம் பலவீனம் எல்லாம் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்-க்கு நன்றாகத் தெரியும். அவர்களை கூட்டணியில் இணைப்பது பற்றி, அ.தி.மு.க தான் முடிவு செய்ய வேண்டும். பா.ஜ.க - அ.தி.மு.க தொகுதி பங்கீடு சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது.” என்று பட்டும் படாமலும் பேசிவிட்டு நகர்ந்தார்.

இதையடுத்து சசிகலா இணைப்பு குறித்து சலசலப்பு மேலும் அதிகமானது. இந்த நிலையில் இந்த வதந்தி குறித்து அ.தி.மு.க. அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்கப்பட்டது. அப்போது, ``அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க, சசிகலா இணைவதற்கு எந்தவித சாத்தியமும் இல்லை, 100% வாய்ப்பும் இல்லை. யாரும் எங்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியாது. பா.ஜ.க எங்கள் உட்கட்சி விவகாரத்தில் தலையிடுவதும் இல்லை. அ.தி.மு.க-வை பொறுத்தவரை கொள்கை வேறு கூட்டணி வேறு. நாங்கள் ஏற்கெனவே எடுத்த முடிவு தான் இறுதி. ’ என்று உறுதிபடத் தெரிவித்து இருக்கிறார்.

இப்போதுதான் அ.தி.மு.க.வினர் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.