ராகுல் காந்திக்கு நோ என்ட்ரி..! காஷ்மீரில் என்னதான் நடக்கிறது..?

காஷ்மீரில் அடக்குமுறை நீடிக்கிறது என்று ராகுல் காந்தி அறிக்கை வெளியிட்டதும், ‘அப்படி எதுவும் இல்லை. அமைதி நிலவுகிறது, நீங்களே வந்து பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கவர்னர் அழைப்பு விடுத்தார்.


அதன்படி இன்று ராகுல் காந்தி கிளம்பியதும், ‘அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் காஷ்மீருக்கு வர வேண்டாம்’ என அம்மாநில அரசு பல்டி அடித்துள்ளது. 

காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு பல இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்., எம்.பி., ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய குழு, இன்று காஷ்மீர் செல்ல விரும்பினர். காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நேரில் ஆய்வு செய்வதுடன், அம்மாநில மக்களை நேரில் சந்திக்க உள்ளதாகவும் அவர்கள் கூறி இருந்தனர்.

ராகுலுக்கு அழைப்பு விடுத்த காஷ்மீர் கவர்னர் இப்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். ‘காஷ்மீரில் சில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சி தலைவர்களின் வருகை காஷ்மீரில் உள்ள அமைதியையும், இயல்பு வாழ்க்கையையும் சீர்குலைக்கும் வகையில் அமையும். எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் தாக்குதல்களில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு முயற்சித்து எடுத்து வருகிறது.

அதே போன்று அசாம்பாவிதங்கள் இன்றி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர் அதனால் மூத்த அரசியல் தலைவர்கள் இங்கு வந்து மக்களின் இயல்பு நிலையை கெடுக்க வேண்டாம். அரசியல் தலைவர்கள் கொஞ்ச நாள் பொறுத்தால் காஷ்மீர் அமைதியாகி விடும் ,, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரமும் நன்றாகி விடும்.’’ என்று கேட்டுக்கொண்டார்.

ஆனாலும், ராகுல் தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபிஆசாத், ஆனந்த் சர்மா, வேணுகோபால், திமுகவின் திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரசின் தினேஷ் திரிவேதி, தேசியவாத காங்கிரசின் மஜித்மேமன், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் ஜா, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குபேந்திர ரெட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, லோக் தந்திரி ஜனதா தளம் கட்சியின் சரத் யாதவ் ஆகியோர் கிளம்பினார்கள்.

இந்நிலையில், காஷ்மீர் சென்றுள்ள ராகுல் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குழுவை அம்மாநில நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அவர்களை மேற்கொண்டு செல்ல விடாமல் அதிகாரிகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தினர். பின்னர், விமான நிலையத்தை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடை விதித்து மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பினர். 

அப்படின்னா இப்போ காஷ்மீரில் என்னதான் நடக்குதுங்கோ..?