நிர்மலா பேச்சு ரொம்ப ரொம்ப அதிகம்! ஆனா, ஏழைகளுக்கு பட்ஜெட்ல என்னம்மா இருக்கு?

ஐந்து லட்சம் ரூபாய்க்குக் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்ற பழைய அறிவிப்பையே மீண்டும் வெளியிட்டு, வழக்கம்போல் ஒரு பட்ஜெட் வெளியிட்டுள்ளார் நிர்மலா சீதாராமன்.


வழக்கமாக பட்ஜெட் ஆவணங்களை ஒரு சூட்கேஸ் பெட்டியில் எடுத்துச் செல்லும் நிதி அமைச்சர்கள் மத்தியில், நிர்மலா சீதாராமன், ஒரு பெண்ணுக்கே உரிய கலை அழகு மிளிர, பெட்டிக்கு பை சொல்லிவிட்டு, இந்திய அரசுச் சின்னம் பொறிக்கப் பட்ட ஒரு பையை கையில் எடுத்துக் கொண்டு வந்தார்.

சட்டென்று பட்ஜெட் தொடர்பான மாற்றங்களை விவரிக்காமல், அரசின் சாதனைத் திட்டங்களை விவரிக்கத் தொடங்கினார். ‘‘நாங்கள் முதலில் பதவியேற்றபோது, இந்தியா, 1.8 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இருந்தது. சில வருடங்களில் அதை 2.7 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றினோம். இன்னும் சில வருடங்களில் 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவோம். சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை வெற்றிபெற முடியும் என்பதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம். 

மேக் இன் இந்தியா திட்டம் ஊக்குவிக்கப்படும். இந்தியா இப்போது 6வது பெரிய பொருளாதார நாடு. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இது 11ஆவது இடத்தில் இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் 657 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் வீடு, கழிவறையை உறுதிப்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது. எரிபொருள் மாற்றாக பேட்டரி வாகனங்கள் உற்பத்தியை அரசு ஊக்குவிக்கும்.நீர்வழிப் போக்குவரத்து மூலம் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த திட்டம்

சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் ரூ.1 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இந்திய பொருளாதாரம் இந்த ஆண்டிலேயே 3 லட்சம் கோடி டாலராக வளர்ச்சி பெறும். ஒரு நாடு ஒரு மின்சார விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சம அளவில் மின்சார விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. சாதாரண மக்களுக்காக பெரும் சீர்த்திருத்தங்களை அரசு மேற்கொண்டு உள்ளது. அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கபடும். ரயில்வே துறையில் பயணியர் சரக்குப் போக்குவரத்தில் தனியார் பங்களிப்பு ஈடுபடுத்தப்படும். தற்போது வீடு வாடகை சட்டங்கள் சீரமைக்கப்பட்டு மாற்றம் கொண்டு வரப்படும். கார்ப்பரேட் கடன் சந்தை சீரமைப்புக்கு கண்காணிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

தன்னார்வ நிறுவனங்களை செபியின் பட்டியலிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தன்னார்வ நிறுவனங்கள் நிதி ஆதாரங்களை திரட்டுவது வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும். விமானப் போக்குவரத்து மற்றும் ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க திட்டம். அந்நிய நாடுகளின் செயற்கைக் கோள்களை செலுத்தும் அளவிற்கு விண்வெளி ஆய்வு வளர்ச்சி அடைந்துள்ளது. இஸ்ரோவின் வணிகரீதியான செயல்பாடுகளுக்கு புதிய அமைப்பு தொடங்கப்படும். 

வங்கி முறைகேடுகள் தடுப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மறைமுக வரிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது. மின்கட்டண முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டியது அவசியம். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இனிமேல் வரித் தொந்தரவு இருக்காது என்று சொன்ன நிர்மலா, 400 கோடி வரை ஆண்டு வருமானம் உள்ள நிறுவனங்கள் 25% வரி கட்ட வேண்டும் என்று சொன்னார். வீட்டு கடனுக்கான வரிவிலக்குல் கூடுதலாக 1.5 லட்சம் கோர முடியுமாம்.

எல்லாம் சரிதான், ஏழைகளுக்கு இதுல என்னம்மா இருக்கு..?