கல்விக் கடன் ரத்தாக வாய்ப்பு இருக்கிறதா? நிதியமைச்சர் சொன்ன அதிர்ச்சி பதில் இதுதான்!

அம்பானி போன்ற பெருமுதலாளிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுவது போன்று கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்ற பேச்சு அவ்வப்போது எழுவது உண்டு.


அது உண்மையா என்று மக்களவையின் கேள்வி நேரத்தின் போது பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பினார். மேலும், கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் அளித்த பதில் திருப்தியாக இல்லை என்றும் தெரிவித்தார்.

ஏனென்றால் அனுராக் தாகூர், ‘கல்விக் கடனை தள்ளுபடி செய்ய எந்த திட்டமும் இல்லை’ என்கிறார். ஆனால், நாட்டில் தொழிலதிபர்களுக்கு கூட கோடிக்கணக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதனால், கிராமப்புற பட்டதாரி இளைஞர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் இருக்கிறதா என அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருமா.

இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துபூர்வமாக அளித்த பதில் இதுதான். ‘‘அதாவது பொதுத்துறை வங்கிகள் அளித்துள்ள தரவுகளின்படி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2016_-17ஆம் நிதியாண்டில் ரூ.67,685.59 கோடியாக இருந்த கல்விக்கடன் மதிப்பு 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.75,450.68 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் மார்ச் 31ம் தேதி கணக்குப்படி 90 சதவிகிதத்துக்கும் அதிகமான கணக்குகள் நிலையாக உள்ளன. 

மேலும், கல்விக்கடனை வசூலிக்க மாணவர்களுக்கு வங்கிகள் நெருக்கடி கொடுத்து அதன் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாக எந்தப் பதிவும் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், கடனை விரைவாகச் செலுத்தக் கூறி மாணவர்களுக்கு வங்கிகள் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படவில்லை. வங்கிகள் மென்மையான போக்கைக் கையாள வேண்டும் என்று வலியுறுத்தப்படும்’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கஷ்டப்படும் பணக்கார தொழிலதிபர்களும், ஏழை மாணவர்களையும் ஒரே மாதிரி பார்க்க முடியாது என்பதுதான் நிர்மலா சீதாராமனின் பதில்.