மாட்டுக்கறி சாப்பிடாத நிர்மலா சீதாராமன், எதற்கு அதற்கு தடை போடுகிறார்? சீமான் ஆவேச கேள்வி!

நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்ற டயலாக் மூலம் திடீர் புகழ் அடைந்திருப்பவர் நிர்மலா சீதாராமன்.


இப்போது அவர் சொன்ன டயலாக்கை வைத்து ஆயிரக்கணக்கான மீம்ஸ் வருகிறது. நாம் தமிழர் சீமானும் நிர்மலா சீதாராமனை பஞ்சர் செய்வதுதான் பரிதாபம். வெங்காய விலை உயர்வு பற்றிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று பதிலளித்துள்ளாரே என்று சீமானிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ‘‘அவர்கள் மாட்டுக்கறி கூடத்தான் சாப்பிடுவதில்லை. சாப்பிடும் எங்களை ஏன் சாப்பிட கூடாது என்று தடைபோடுகிறார்கள்?. நீங்கள் சாப்பிடாத வெங்காயம் உங்களை பாதிக்காத போது, நீங்கள் .சாப்பிடாத மாட்டுக்கறியும் உங்களை பாதிக்காதுதானே..? 

ஒரு பொறுப்புள்ள அமைச்சர் சொல்லும் பதிலா இது? மற்றொரு மத்திய அமைச்சர் இவ்வளவு போக்குவரத்து நெரிசல் இருக்கும்போது ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியடைந்துவிட்டதாக எப்படி கூற முடியும் என்று கேட்கிறார்? எப்படிபட்ட அமைச்சர்களை நாம் தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம் என்பதை கற்றறிந்த இளையோர் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதேபோன்று ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அறித்துள்ளதே என்று கேட்கப்பட்டது. இப்படி தனித்தனியாக தேர்தலை நடத்துவதன் மூலம் மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்ப்படுத்துகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இடைத்தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல், நாடாளுமன்ற இடைத்தேர்தல், மீண்டும் சட்டமன்ற இடைத் தேர்தல் என தொடர்ந்து தேர்தல்களை வைத்து மக்களிடம் வெறுப்பான மனநிலையை உருவாக்கியுள்ளது. இதை தேர்தல் ஆணையம் தவிர்த்திருக்க வேண்டும். இருப்பினும் எங்களை பொறுத்தவரை தேர்தல் எப்போது வந்தாலும் போட்டியிட ஆயத்தமாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.