கார் வாங்கலேன்னா கம்பி எண்ணுங்க..! இப்படியும் எச்சரிக்கை செய்வாரா நிர்மலா சீதாராமன்?

இந்தியாவில் பொருளாதாரம் சரியில்லை என்று சொன்னால், அமெரிக்கா, சீனாவைவிட நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார் நமது நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதேபோல்,


வாகன உற்பத்தி (ஆட்டோமொபைல்) துறை கடுமையான சரிவை சந்திக்கிறது என்று சொன்னால், ‘பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்களை வாங்குங்கள்’ என்று ஐடியா கொடுக்கிறார் நிர்மலா சீதாராமன்.

மக்கள் இப்போது ஏன் புதிய வாகனங்களை வாங்கவில்லை என்பதன் காரணம் நிர்மலா சீதாராமனுக்குத் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், இருசக்கர வாகனங்கள் விற்பனை சரிந்தால் நடுத்தர குடும்பத்தினர் பொருளாதாரத்தில் அடிவாங்கியிருக்கிறார்கள் என்று அர்த்தம்..

நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை சரிந்தால் உயர் மற்றும் உயர் நடுத்தர குடும்பத்தினர் பொருளாதாரத்தில் கீழே சென்றுவிட்டார்கள் என்று அர்த்தம். லாரி விற்பனை சரிந்தால் தொழில் முனைவோர்கள் பொருளாதார ரீதியாக சுணங்கிக் கிடக்கிறார்கள் என்று அர்த்தம்.

அதனால் ஆட்டோமொபைல் துறை சரிவு என்பது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பதன் வெளிப்பாடு. தவிர பொருளாதார சிக்கல் உள்ள நிலையில் அரசு செலவைக் குறைக்கத்தான் திட்டமிடுவார்கள். ஆனால் புதிய வாகனங்களை வாங்கச் சொல்வது எந்தவிதத்தில் சரியாகும்.. அதுவும் மக்கள் பணம்தானே!

இதை உணர பெரிய அறிவாளியாகவோ, பொருளாதார நிபுணராகவோ இருக்கவேண்டும் என்பதில்லை.

இப்போது நிலவுவது ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி மட்டுமல்ல.. ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. ஆனால், நிர்மலா சீதாராமனோ இது சாதாரண விஷயம் என்கிறார். உடனடியாக நிபுணர் குழு அமைத்து சரிசெய்ய வேண்டிய விஷயம் இது.

நல்லவேளையாக, கார் வாங்கவில்லை என்றால் சிறையிலடைக்கப்படுவார்கள் என்று நிர்மலா சீதாராமன் சொல்லவில்லையே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.