திமுகவுடன் மதிமுகவை வைகோ இணைத்துவிடலாம்! நாஞ்சில் சம்பத் கிண்டல்!

தமிழகத்திற்கு ஸ்டாலின் தலைமை தான் அவசியம் என்றும் அது காலத்தின் கட்டாயம் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.


தமிழை கச்சா பொருளாக்கி வியாபாரம் செய்து வரும் நாஞ்சில் அதையே ஆதாரமாகக் கொண்டு கட்சிக்கு கட்சி தாவுவதோடு வெட்கமின்றி கருத்துக்களை மாற்றி மாற்றிக் கூறுவதில் வல்லவர். மதிமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத்துக்கு அ.தி.மு.க.வின் துணைவ்கொள்கை பரப்புச்செயலாளர் பதவியை கொடுத்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன் அவரது மரணத்திற்கு சசிகலா தரப்புதான் காரணம் என குற்றம்சாட்டினார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே சசிகலா தரப்புக்கு ஆதரவாக பேசிய நாஞ்சில் சம்பத், தினகரன் அணியில் சேர்ந்தார். பின்னர் கட்சி தொடர்பான கருத்து வேறுபாட்டால் தினகரனிடம் இருந்து விலகிய அவர்,சிறிது காலம் அரசியலே வேண்டாம் என்று கூறிவிட்டுப் போனார்.

ஆனால் அரசியல் அரிப்பு விடாத நிலையில் மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின்  மக்கள் விரோத திட்டங்களுக்கு தேர்தல் மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதன் பலனை பாஜகவுடன் கூட்டணி வைத்த தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் அனுபவித்து வருவதாகவும் கூறினார். தமிழகத்திற்கு இனி ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிதான் தேவை என்றும், அது காலத்தின் கட்டாயம் என்றும் கூறிய அவர், தி.மு.க., ம.தி.மு.க. ஆகியவற்றின் கொள்கை ஒன்றுதான் என்ற நிலையில் இரு கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.