அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே! இவர் யாரென்று தெரிகிறதா?

இப்போது இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.


அதனால், அடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி யார் என்று இன்று குடியரசுத் தலைவர் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, இப்போது உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருக்கும் சரத் அரவிந்த் பாப்டே எனப்படும் எஸ்.ஏ.பாப்டேவை தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

நவம்பர் 18ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க இருக்கும் பாப்டே அடுத்த 18 மாதங்கள் இந்தப் பதவியில் இருப்பார். இவரை இந்தப் பதவிக்கு பரிந்துரை செய்தது தற்போதைய தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய்.

இப்போது நீதிமன்றங்களில் சுமார் 3.50 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கருதப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 58,669 வழக்குள் உள்ளன. நாளுக்கு நாள் புதுப்புது வழக்குகள் பதியப்பட்டு வருகிறது.  

2040ஆம் ஆண்டில், இந்திய நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை 15 கோடியாக அதிகரிக்கும் என்றும், இவற்றை விசாரிக்க 75,000 நீதிமன்றங்கள் தேவைப்படும் என்றும் தேசிய நீதிமன்ற நிர்வாக அமைப்பு கணித்துள்ளது.

24.4.1956 அன்று நாக்பூரில் பிறந்தவர் நீதிபதி பாப்டே. இவர் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் 1978ம் ஆண்டு, சட்டம் படித்து முடித்தார். முதலில் பாம்பே நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த அவர் 1998ம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் ஆனார். பாப்டேவின் தாத்தாவும், தந்தையும் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2000த்தில் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2012ல் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார் பாப்டே. அதனை தொடர்ந்து 2013ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். அடுத்து தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும் பாப்டே நேர்மையான நீதிபதி என்று பெயர் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.