ரஞ்சன் கோகாய் போயாச்சு, அடுத்த தலைமை நீதிபதி பாப்டே எப்படிங்க?

தீபக் மிஸ்ராவின் ஏதேச்சதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுத்த போது திரும்பி பார்க்க வைத்தவர் தான் ரஞ்சன் கோகாய்.


ஆனால், தன்னுடைய பதவிகாலத்தில் அவர் நடந்து கொண்ட விதம் அவர் வகித்த பதவிக்கு பெருமை சேர்க்கவில்லை என்று வருத்தப்படுகிறார் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன். அசாம் அகதிகள் விவகாரத்தில் காட்டிய சட்டவழி முறைகளை மீறிய மனித நேயமற்ற மூர்க்கத்தனம். அயோத்தி தீர்ப்பில் வெளிப்பட்ட சட்டத்தை புறக்கணித்த சார்பு நிலை. 

தன் மீதான பாலியல் வழக்கை கையாண்டதில்,தன் மனசாட்சியையே கொன்று புதைத்த அதிகார மமதை. சபரிமலை திர்ப்பில் வெளிப்பட்ட சஞ்சலம். நீதிமன்ற நடைமுறைகளில்,வழக்குகளை கையாண்டதில் பின்பற்றிய வெளிப்படையற்ற பூடகத் தன்மை. உச்ச நீதிமன்ற அலுவலகத்தை தகவல் பெறும் உரிமை சட்ட வரம்பிற்குள் கொண்டு வரலாம் என்ற திர்ப்பில் வெளிப்பட்ட தயக்கமும், தடுமாற்றமும்.

இப்படிப்பட்ட ரஞ்சன் கோகாய் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட எஸ்.அரவிந்த் பாப்டே எப்படிப்பட்டவர் என புரிந்து கொள்வதற்கு ரஞ்சன் கோகாயின் பாலியல் புகாரை அரஜாஜகமாக கையாண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணையே பாதிப்புக்கு உள்ளாக்கிய பெருந்தன்மைக்கு சொந்தக்காரர்தான் இந்த பாப்டே என்ற அளவோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ஆனால், நீதித்துறை என்பது சில தனிமனிதர்களின் பலவீனங்களையெல்லாம் கடந்து...இன்னும் மனசாட்சியின் குரலாக பல நேரங்களில் ஒலித்துக்கொண்டு உள்ளது என்பதையும் நாம் நன்றியுடன் மட்டுமின்றி, நம்பிக்கையுடனும் நினைத்துப் பார்க்கத்தான் வேண்டும். அதற்கு உதாரணமாக நிறைய பேரை பட்டியலிட முடியும் என்றாலும், நீதிபதிகளுக்கு குன்ஹா அவர்களையும் வழக்கறிஞர்களுக்கு பிரசாந்த் பூசன் அவர்களையும் உதாரணப்படுத்த விரும்புகிறேன்.

நீதிமன்றங்களில் மூன்றரை கோடிக்கும் மேலான வழக்குகள் தேங்கி உள்ளது என்றால் இன்னும் கோடிக்கணக்கானவர்கள் நீதி தேடும் நம்பிக்கையாக நீதிமன்றங்கள் உள்ளன என்று தான் பொருள்! அத்துடன் காலாதமதமாகும் நீதியை மறுக்கப்பட்ட நீதியாகத் தான் சொல்ல வேண்டும்.

இந்த அதீத வழக்குகள் தேக்க எண்ணிக்கைக்கு நீதிமன்ற இழுத்தடிப்பு நடவடிக்கைகள் மட்டுமல்ல, 5,500 மேற்ப்பட்ட நீதிபதிகள் பணியிடங்களை அரசாங்கம் நிறைவேற்றாமல் இருப்பதும் காரணமாகும். அதே சமயம் சிறைச் சாலைகளில் நான்கு லட்சம் விசாரணைக் கைதிகள் குற்றம் நிருபணமாகமலே வாடிக் கொண்டிருப்பதற்கும் இந்திய நீதிதுறையே பொறுப்பு. எளியவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும் நாள் எந்த நாளோ, அதற்கான தலைமை எதுவோ அந்த

நாளையும், அந்த தலைமையையும் எதிர்பார்ப்போம்! காத்திருப்போம் என்று தெரிவித்துள்ளார்.