இந்திய பவுலர்களை துவம்சம் செய்து தரமான வெற்றி பெற்ற நியூஸி!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது T20 போட்டியில் நியூஸிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடர்ந்த நியூஸிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை அந்த அணிக்கு கொடுத்தனர். காலின் முன்ரோ மற்றும் டிம் ஷைபெர்ட் இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்ட பவுண்டரிகளை விளாசினர்.

 சிறப்பாக விளையாடிய முன்ரோ 34  ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், டிம் ஷைபெர்ட்வுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தனர்.

 அதிரடியாக விளையாடிய 43 பந்துகளில் 84 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 219 ரன்களை குவித்ததது.

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை சேஸ் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டனுமான ரோஹித் சர்மா 1 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஷிகர் தவான் 29 ரன்களுக்கும், விஜய் ஷங்கர் 27 ரங்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந்திய அணியின் சார்பில் டோனி மட்டும் அதிகபட்சமாக 39 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் இந்திய அணி 19.2 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் நியூஸிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. சிறப்பாக பந்து வீசிய டிம் சௌதீ 3 விக்கெட்களை எடுத்தார்.

சிறப்பாக விளையாடிய நியூஸிலாந்தின் டிம் ஷைபெர்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.