தங்க கடத்தல் கும்பலால் கொலை! மியூசிசியன், மகள் மரணத்தில் பீதி கிளப்பும் பகீர் தகவல்!

திருவனந்தபுரம்: கேரள இசைக் கலைஞர் பாலபாஸ்கர் மரணத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.


திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பாலபாஸ்கர். பிரபல சினிமா இசையமைப்பாளர் மட்டுமின்றி முன்னணி வயலின் கலைஞராகவும் பரிணமித்து வந்த பாலபாஸ்கர், கடந்த அக்டோபர் 25ம் தேதி திருச்சூர் சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது, இவரது கார் விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த பாலபாஸ்கர் ஒரு வாரம் சிகிச்சை பெற்ற நிலையில், மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

அவரது மகள் தேஜஸ்வினி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அதேசமயம், அவரது மனைவி மட்டும் உயிர் பிழைத்தார்.  கேரளா முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய பாலபாஸ்கரின் மரணத்தில் இப்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, சமீபத்தில் கேரள விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த புகாரில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில், ப்ரகாஷன் தம்பி என்ற குற்றவாளி, கேரள இசைக்கலைஞர் பாலபாஸ்கரின் மேலாளராகப் பணிபுரிந்ததாக, போலீசாரிடம் கூறியுள்ளார். ஒருவேளை தங்க கடத்தலில் பாலபாஸ்கருக்கு தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால், இதனை அவரது மனைவி மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், ப்ரகாஷன் தம்பி போன்றோர் எனது கணவரின் மேலாளர் கிடையாது. எனது கணவரின் இசை நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றியவர்களை முன்வைத்து, எங்கள் மீது வீண் சந்தேகம் பகிரப்படுகிறது. இது வேதனை அளிப்பதாக, உள்ளது, என்று தெரிவித்துள்ளார்.