முழுவதும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கே சிறப்பு ஒதுக்கீடு - புதிய சட்டம் வருகிறது

தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்பட்ட பல தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளை எழுதுபவர்களில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு பணிநியமனத்தில் 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


ஆனால் இச்சட்டத்தைப் பயன்படுத்தி ஆங்கில வழியில் படித்தவர்களும் பணியைப் பெற ஏதுவாக இருந்தது கண்டறியப்பட்டது. அதை மாற்றி புதிய சட்டம் கொண்டுவர வேண்டுமெனும் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது. அதன்படி, இன்று சட்டப்பேரவையில் அதற்கான சட்டவரைவு தாக்கல்செய்யப்பட்டது. 

அதாவது, முந்தைய 2010ஆம் ஆண்டு சட்டத்தில் குறிப்பிட்ட பணிக்கு தேவைப்படும் அடிப்படையான கல்வித் தகுதியை தமிழ்வழியில் படித்திருந்தாலே, 20 % இட ஒதுக்கீட்டைப் பெறமுடியும். இதன் காரணமாக, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை மட்டும் தமிழ்வழியில் படித்து விட்டு, தமிழ்வழிக்கான இட ஒதுக்கீட்டைப் பெற்றுவருகின்றனர். இதன்மூலம், சட்டம் கொண்டுவரப்பட்டதன் அடிப்படை நோக்கமே காலியாகிப்போனது. 

எனவே, பள்ளிக்கல்வி முதல் பட்டப்படிப்புவரை தமிழ்வழியில் மட்டுமே படித்தவர்களுக்கே இந்த ஒதுக்கீடு கிடைக்கும்வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர தமிழ் அமைப்புகள் பலவும் சில அரசியல் கட்சிகளும் கோரிக்கைவிடுத்தன. 

அதன்படி, இனி ஆறாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் பயின்று, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தமிழில் எழுதியவர்கள் மட்டும்தான், தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டைப் பெறமுடியும் என சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முறையான நடைமுறைகளுக்குப் பின்னர் இது சட்டமாகும்.