ஆகஸ்ட் 15 முதல் புத்தம் புதிய காஷ்மீர்! பனிமலையில் தீவைக்கும் மோடியின் அரசு வெற்றி பெறுமா?

காஷ்மீர் மாநிலத்துக்கு , அரசியலமைப்புச் சட்டம் விதி 370 கீழ் பல சிறப்புச் சலுகைகளை வழங்கி இருக்கிறது.


அதை அகற்றி காஷ்மீரை மற்ற மாநிலங்களைப் போல மாற்றுவோம் என்கிறது பிஜேபி தேர்தல் அறிக்கை.வெகு நாட்களாகத் தயங்கிக் கொண்டு இருந்த இந்த நடவடிக்கையை வரும் ஆகஸ்ட் 15ம் தேதி துவங்க மத்திய அரசு தீர்மானித்து இருப்பதாகத் தெரிகிறது. இதன் துவக்கமாக காஷ்மீர் மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் இந்திய தேசியக் கொடியேற்றி சுதந்திர தினவிழா கொண்டாட முடிவு செய்திருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

இது காஷ்மீரின் பள்ளிகள், கல்லூரிகளில் கூட பல ஆண்டுகளாக நடந்திராத ஒரு நிகழ்வு.பிரிவினைவாதிகளின் மிரட்டலுக்கும்,தீவிரவாதத் தாக்குதலுக்கும் அஞ்சி ஆகஸ்ட் 15ம் தேதி காஷ்மீரி மக்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள்.அதனால் சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெறுவதில்லை.  மாவட்ட தலைமையகங்களில் மட்டுமே விழாக்கள் நடக்கும்.கடந்த பஞ்சாயத்து தேர்தலில் ஓட்டுப்பதிவு மிகவும் குறைந்து போனதால் பல பஞ்சாயத்துகளில்  பிஜேபி ஆட்சியை பிடித்து இருக்கிறது.

இதே போன்ற நிலையை உருவாக்கி காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கவும் பிஜேபி திட்டமிடுவதாகத் தெரிகிறது அதன் முன்னோட்டமாக , காஷ்மீரின் எல்லா பஞ்சாயத்துகளிலும் சுதந்திர தினக் கொண்டாட்டமும் கொடியேறமும் நடத்த அமித் ஷா முடிவு செய்திருக்கிறார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வெகுவாக குறைக்கப் பட்டிருந்த பாதுகாப்பு படைகளின் என்னிக்கை அதிகப்படுத்தப் படுகிறது.

கடந்த சில வாரங்களில் மட்டும் 12000 வீரர்கள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். முத்தலாக் மசோதாவினால் கிடைத்திருக்கும் ஆதரவை முதலாக்கத்  துடிக்கிறது மத்திய அரசு.இந்த சுதந்திர தின விழாவை வெற்றிகரமாக நிகழ்த்திவிட்டால்,அதைத் தொடர்ந்து , அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்க மத்திய அரசு முயற்சி செய்யும் என்று நம்பப்படுகிறது.