சிக்கிம் மாநிலத்துக்கு புதிய நீதி! சசிகலாவுக்கும் வாய்ப்பு கொடுப்பாரா நரேந்திர மோடி?

இன்று சிக்கிம் மாநில முதல்வராக இருக்கும் தமங்க் பற்றி ஒரு சிறிய அறிமுகம் இருந்தால்தான், அவருக்கு தேர்தல் ஆணையம் எதற்காக வளைந்துகொடுத்தது என்பதை அறிந்துகொள்ள முடியும்.


சிக்கிம் மாநிலத்தில் அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்தவர்தான் பிரேம் சிங் தமங்க். அதன்பிறகு அரசியலில் ஈடுபட்டு சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியில் இணைந்து பங்கேற்றார். துடிப்பான அரசியல் செய்து, பல முறை அமைச்சராக இருந்தார்.

எத்தனை நாட்கள்தான் வேறு ஒரு கட்சிக்கு உழைப்பது என்று நினைத்து சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியில் இருந்து விலகி, சிக்கிம் புரட்சிகரக் கட்சியைத் துவக்கினார். கடந்த 2014 சட்டமன்றத் தேர்தலில் அவருடைய கட்சி 10 இடங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்த நேரத்தில் அவர் அமைச்சராக இருந்த காலத்தில் செய்த முறைகேடு காரணமாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, 2017ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

2018ம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்தார். சிறைக்குப் போய்வந்தாலே ஒரு தியாகி இமேஜ் வந்துவிடுமே, அப்படித்தான் தமங்க்கிற்கும் மரியாதை கூடியது. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அவருடைய கட்சி 17 இடங்களைப் பிடித்து ஆட்சியை பிடித்தது. உடனே சட்டமன்ற உறுப்பினர்களால் தமங்க் முதல்வர் ஆக்கப்பட்டார்.

ஆனால், ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது சட்டம். அதனால் முதல்வராக நீடிக்க முடியாதே என்று கவலைப்பட்ட தமங்க், உடனே பிரதமர் மோடியை சந்தித்தார். பா.ஜ.க.வின் ஆதரவுக் கட்சியாக மாறினார்.

அதன்பிறகு நடந்ததுதான் ஆச்சர்யம். ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற தனக்கு தேர்தலில் நிற்பதற்குரிய காலக்கெடுவை நீக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்புறம் என்ன..? தேர்தல் கமிஷனும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் 13 மாதங்களில் போட்டியிடலாம் என்று அறிவித்துவிட்டது.

இந்த விவகாரம் அறிந்து சசிகலா குஷியாகி இருக்கிறார். ஏனென்றால் அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலை இருந்துவந்தது. சிக்கிம் நிலவரத்தைக் கணக்கில் காட்டி சசியால் வரும் தேர்தலில் நிற்க முடியும், ஏன் ஆட்சியையும் பிடிக்க முடியும். என்ன, மோடி மனசு வைக்கணும், அம்புட்டுத்தான்.