சவுதி அரேபிய ஆயில் நிறுவனமான சவுதி ஆரம்கோ. இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்ணெய் மற்றும் ரசாயன வணிகத்தின் 20 % பங்குகளை 75 பில்லியன் டாலர் மதிப்பில், அதாவது 5 லட்சத்து 25 ஆயிரம் கோடி இந்திய மதிப்பில் வாங்கிறது என ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தின் 42 வது ஆண்டு நிர்வாக குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
பிறந்தது புதிய இந்தியா! அதன் பெயர் ரிலையன்ஸ் இந்தியா!
சவூதி அரேம்கோ எனும் நிறுவனம் சவுதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ மற்றும் உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய எரிவாயு உற்பத்தி நிறுவனம் ஆகும்.
முகேஷ் அம்பானியின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட திங்கள் வர்த்தகத்தின் சில நிமிடங்களிலேயே. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் RIL பங்குகள் கிட்டத்தட்ட 9 சதவிகிதம் உயர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் வரத்தகமாகியது. மேலும் லண்டன் பங்குச் சந்தையிலும் ரிலையன்ஸ் டெபாசிடரி பாண்டுகள் (ஜி.டி.ஆர்) 6.5% க்கும் அதிகமாக வர்த்தகமானது.
இந்தியா தனது எண்ணெய் தேவைகளை 80 சதவீதத்திற்கும் மேல் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது,இந்தியாவுக்கு கச்சா சப்ளை செய்யும் ஐந்தாவது பெரிய நாடாக ஈரான் ஈராக் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகள் உள்ளன. வணிக புலனாய்வு மற்றும் புள்ளிவிவர இயக்குநரக தரவுகளின்படி. ஈராக் இந்த நிதியாண்டில் மட்டும் 46.61 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளது, இது கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்ட 45.74 மெட்ரிக் டன்னை விட இரண்டு சதவீதம் அதிகமாகும்.
ஈரானுடனுடனான எண்ணெய் வணிக தொடர்பினை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடுத்த அறிவுறுத்தலின் பேரில். சௌதி அரேபியாவிடம் தஞ்சம் புகுந்துள்ளது நமது அரசு. அதுமட்டுமின்றி இந்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களை விட இந்த முறையும் தனியார் நிறுவனமான ரிலையன்ஸுக்கே அடித்துள்ளது ஜாக்பாட்.
ஆம். வருடத்திற்கு சுமார் 25 மில்லியன் டன் பேரல் கச்சா எண்ணெய் பேரல்கள் இந்த நிறுவனத்திற்கு இறக்குமதி ஆகின்றன. அதாவது ஒட்டுமொத்த இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் அளவில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இறக்குமதி ஆகிறது . இந்தியாவில் இவ்வளவு அதிக மதிப்பீட்டில் எண்ணெய் இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனம் என சாதனை படைத்துள்ளது இந்த நிறுவனம்.
இதற்குமேல் இந்தியன் ஆயில். ஷெல். இந்துஸ்தான் பெட்ரோலியம் . ஓஎனன்ஜிசி . பாரத் பெட்ரோலியம் என அனைத்து நிறுவனங்களும் ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் தான் விலை நிர்ணயம் செய்ய முடியும்.
கடந்த ஜுலை 5ம் தேதி பட்ஜெட்டின் போது வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அவர் அறிவித்த அடுத்த மாதமே இவ்வளவு பெரிய அந்நிய முதலீடு பற்றிய அறிவிப்பு வந்துள்ளது இந்திய முதலீட்டாளர்களை திக்குமுக்காட செய்துள்ளது.
உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் முதன்மையான நாடான சவுதி அரேபியாவுடன். இந்தியாவின் உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வரும் எரிசக்தி உறவுகளை அடிப்படையாகக் கொண்டு முன்னேறி வருகின்றன,
மேலும் இரு நாடுகளும் இந்தத் துறையில் வணிக உறவைத் தாண்டி கூட்டு வியாபார முயற்சிகளுக்குச் செல்ல. புதிய சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புகளை உருவாக்க இருப்பதாக ஜுன் மாதம் சௌதி அரேபியா சென்றிருந்த பிரதமர் மோடி அவர்கள் பேசியது நினைவு இருக்கலாம். அதன்படியே நேற்று ஆசியாவின் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு பற்றி அறிவிப்பை செய்துள்ளது ரிலையன்ஸ் குழுமம்.
இந்த ஒப்பந்தங்களின் படி. ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ். ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் உட்பட, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இங்கிலாந்தின் பிபி பெட்ரோலியம் நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு ஒப்பந்தத்தின் 51 சதவீத பங்குகளும் அடங்கும் என அம்பானி கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP Plc) மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என இரு நிறுவனங்களுக்கும் இடையே நாடு முழுவதும் 5500 சில்லறை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைப்பதற்க்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த ஒப்பந்தங்களில். விற்பனை நிலையங்கள் அமைக்க காலவரையறை இல்லாமலும். முதலீட்டு தொகை எவ்வளவு என்று எதுவும் குறிப்பிடாத பட்சத்தில். நேற்று தீடீரென இந்த கூட்டு நிறுவனங்களின் முதலீட்டு தொகை 7 ஆயிரம் கோடி என்று அறிவித்துள்ளது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலிய கூட்டு ஒப்பந்தங்கள்.
எந்த விதிமுறைகளின் படி சௌதி அரேபியா நிறுவன ஒப்பந்தங்களில் இந்திய கூட்டு நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளது என்பதை முகேஷ் அம்பானி தெளிவாக விளக்கவில்லை. இந்த மெகா ஒப்பந்த அடிப்படையில் ஆரம்கோ நிறுவனம் ஒரு நாளைக்கு 7 லட்சம் கச்சா எண்ணெய் பீப்பாய்களை இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு. நீண்ட கால அடிப்படையில் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படிப் பார்த்தால். அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை விட இந்தியாவின் மிகப்பெரிய பெட்ரோலிய இறக்குமதி நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மாற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டின் படி ரிலையன்ஸ் நிறுவனமும். இந்திய எரிசக்தி துறையும் தேசத்தில் புதிய சகாப்தத்தை உருவாக்குகிறது ரிலையன்ஸ் குழுமம் மூலமாக.
இந்தியாவில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து 2015-16ம் ஆண்டு 202.9 மில்லியன் டன்னாகவும். அடுத்தடுத்த 3 ஆண்டுகளில் 226.6 மில்லியன் டன்னாகவும் இறக்குமதி செய்துள்ளது .ஈரான் மற்றும் அரேபிய நாடுகளின் கச்சா எண்ணெய் விற்பனையின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது .
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விற்பனை விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனை முடிவு செய்யும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன . இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பெட்ரோலிய சந்தையின் தலைவராக உருவெடுக்கிறது.
இந்திய எண்ணெய் விற்பனை சந்தையின் ஜாம்பவானாக உருவெடுக்க இருக்கும் இந்த நிறுவனம் ஏற்கெனவே ஆட்டோமொபைல். கம்யூனிகேஷன். கல்வி. காப்பீட்டு. போக்குவரத்து என பல துறைகளை தன்வசம் வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் அடுத்த 18 பாதங்களில் கடன் இல்லாத நிறுவனமாக விளங்கும் என கூறியுள்ளார் முகேஷ் அம்பானி. 2018-19 நிதியாண்டின் இறுதியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர கடன் ரூ .1.54 லட்சம் கோடியாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தாலும். .
அடுத்த 18 மாதங்களில் கடன் இல்லாத நிறுவனமாக மற்ற செயல்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் திரு. முகேஷ் அம்பானி அவர்கள். அதாவது கடந்த சில ஆண்டுகளில் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் மூலமான சில்லறை வர்த்தகம் , ஜியோ மூலம் தொலைத் தொடர்பு மற்றும் ஈ-காமர்ஸ் ஆகிய நுகர்வோர் அமைப்பைக் கொண்ட வணிகங்களில் தீவிரமாக பன்முகப்படுத்தப்பட்டதாலும், நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் வணிகங்களை மேம்படுத்தியதால், ரூ .2.87 லட்சம் கோடிக்கு மேல் மொத்தக் கடன் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது..
இந்த புதிய எண்ணெய் இறக்குமதியை கருத்தில் கொண்டும். இந்தியாவில் அமையவுள்ள 5500 சில்லறை விற்பனை நிலையங்களை கருத்தில் கொண்டுமே இப்படியான அறிக்கையை விடுத்துள்ளதாக பல பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி காஷ்மீர் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பு இருக்கும் என்று அறிவித்துள்ளது . அதானி நிறுவனத்திற்கு லடாக் பகுதியில் அனுமதி கொடுக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ள மறைமுக அழுத்தம் என்றே கருத முடிகிறது.
ஏனென்றால். லடாக் பள்ளத்தாக்கு பகுதியில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான கனிம வளங்கள் குவிந்துள்ளதாக 2011ஆண்டு முதலே. பலதரப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சீனாவும் இந்த பகுதியில் தங்கச் சுரங்கங்களை தோண்டி வருகிறது. இந்த நிலையில் இரண்டாக பிரிக்கப்பட்ட காஷ்மீர் மாநிலத்தை யார் பங்களிப்பில் விடுவது என்று மத்திய அரசு முடிவு செய்யும் முன்பே.!
காஷ்மீர் மாநிலத்தில் முதலீடுகள் தொடங்க தாங்கள் தயாராக இருப்பதாக அறிவிப்பினை தனது அலுவலக அறிவிப்புகள் மூலம் சூசகமாக தெரிவித்துள்ளார் முகேஷ் அம்பானி. மத்திய அரசும் இதற்கு மறுப்பு சொல்லப் போவதில்லை. எது எப்படியோ. முகேஷ் அம்பானியின் ஜியோ வந்தபிறகு இந்தியாவின் முண்ணனி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்செல். வெர்ஜின். டொகோமோ. டாடா டெலிசர்வீஸ். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என அனைத்தும் இன்று இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துவிட்டன.
இந்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் ம் நிலை தடுமாறி கீழே விழ தயாராகிக் கொண்டிருக்கிறது. ஏர்டெல் தனது வாடிக்கையாளர்கள் 80% பேரை இழந்துள்ளது. வோடபோன் இங்குள்ள போட்டியை சமாளிக்க முடியாமல் ஆதித்யா நிறுவனத்தின் ஐடியாவுடன் தனது நிறுவனத்தை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அடுத்தபடியாக அதானி நிறுவனம் வந்த பிறகு இந்தியாவில் உள்ள அனைத்து மினி ரத்னா துறைமுகங்களும் அந்த நிறுவனத்தின் கைகளுக்கு மாற்றப்பட்டு விட்டன.
இந்திய ரயில்வேயில் தனியார் பங்களிப்புடன் சேவை தொடரும் என மத்திய அமைச்சர் கூறியதில் இருந்தே அது ரிலையன்ஸ் நிறுவனத்திற்க்கான அறிவிப்பு என்று மத்திய அரசு ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். மேலும் ரஃபேல் விமான கொள்முதலில் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இப்போது எண்ணெய் துறையில் இந்த நிறுவனம் இறங்கியுள்ளதால் அரசு மற்றும் தனியார் துறை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளனர் ....
மணியன் கலியமூர்த்தி.