கஜா புயல் பாதிப்புக்கு புதிய வீடுகள்! உண்மையில் ரஜினி செலவில் கட்டி கொடுக்கப்பட்டதா? உண்மை இது தான்!

கஜா புயலால் வீடு இழந்த 10 பேருக்கு கட்டப்பட்ட புதிய வீடுகளுக்கான சாவியை நடிகர் ரஜினி நேற்று தனது இல்லத்தில் வழங்கினார்.


கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் நாகை மாவட்டம் சின்னாபின்னமானது. ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரஜினி தனது சொந்த செலவில் முதற்கட்டமாக பத்து பேருக்கு வீடு கட்டிக் கொடுப்பதாக தகவல் வெளியானது.

தலா ரூ.1.80 லட்சம் செலவில் 18 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 10 வீடுகளுக்கான சாவியை ரஜினி நேற்று தனது இல்லத்தில் வைத்து பயனாளிகளுக்கு கொடுத்ததாக செய்திகள் வெளியாகின. இதனிடையே ரஜினி தான் இந்த வீடுகளுக்கு செலவு செய்தாரா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்ட போது நாகை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் பதில் அளிக்க தயங்கினார்.

இது குறித்து விசாரித்த போது, அந்த பத்து வீடுகளையும் நாகை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தான் தங்கள் சொந்த செலவில் கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களில் ரஜினி மக்கள் மன்றத்தினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீடுகளை இழந்து தவித்த மக்களை பார்த்து வீடு கட்டிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர்.

இதனை அடுத்து அவர்களே தங்களுக்குள் பணம் வசூல் செய்து இந்த வீடுகளை கட்டி பயனாளிகளிடம் கொடுத்துள்ளனர். மேலும் தாங்கள் செய்துள்ள இந்த வேலையை அங்கீகரிக்கும் வகையில் பயனாளிகளுக்கு ரஜினி தனது கைகளால் சாவியை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்க அதனை ஏற்று ரஜினி சாவியை கொடுத்துள்ளார். மற்றபடி ரஜினி தனது செலவில் இந்த வீடுகளை கட்டிக் கொடுக்கவில்லையாம்.