புதிய கல்விக் கொள்கை என்பது குலக்கல்வி திட்டம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை..! எச்சரிக்கும் சமூக நல ஆர்வலர்.

புதிய கல்விக் கொள்கை என்பது குலக்கல்வி திட்டம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று தேனி சுந்தர் பதிவு வெளியிட்டுள்ளார்.


சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை கற்றல் செயல்முறையை அனைத்து மட்டங்களிலும் மாற்றும் … இந்த மாற்றம் இராணுவப் படைகளுக்கு கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்களை அடையாளம் காண உதவும்.. இது சிப்பாய்களுக்கான நடைமுறை மற்றும் புதுமையான அணுகுமுறைக்கு ஏற்றதாக இருக்கும்” என்று ஜெனரல் ராவத் கூறினார் என்கிற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. 

கிராமப்புற மாணவர்கள், இளைஞர்கள் சட்டெனப் பார்த்தவுடனே, ஆஹா, நமக்கெல்லாம் வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய கல்வி முறையை ஏன் எதிர்க்க வேண்டும் என்று நினைக்கக் கூடும்..

குலக்கல்வியை நோக்கித் தள்ளுகின்ற கல்விக் கொள்கை என்று மாற்றுக்கருத்து முன்வைக்கின்ற, இது கல்விக் கொள்கை அல்ல, காவிக் கொள்கை என்று நிராகரிக்கின்ற நண்பர்களும் முன்வைக்கின்ற வாதமும் இது கிராமப்புற, ஏழை எளிய குழந்தைகளை குலக்கல்விக்கு தள்ளுகின்றது என்பதையே பிரதான வாதமாக முன்வைக்கின்றனர்.

அனைவருக்கும் கல்வியையும் வேலையையும் உத்தரவாதம் செய்வோம் என்று அறிவிக்கத் திராணியற்ற மத்திய அரசு தான் வேலைக்கான தகுதியை வளர்த்துக் கொள், உன் தகுதிக்கும் திறமைக்குமான வேலையை நீயே தேடிக்கொள் என்று நமக்கு ஆலோசனை சொல்கிறது..

என்னால் அனைவருக்கும் தரமான, சமமான இலவச கட்டாயக் கல்வியை, பாகுபாடற்ற சமமான கற்றல் வாய்ப்புகளை உருவாக்கித் தர முடியும் என்று சொல்வதற்கு திராணியற்ற அரசு தொழில்கல்வி, தொழில் வாய்ப்பு என்று பசப்புகிறது.. ஸ்கில் இந்தியா என்று பூசி மெழுகுகிறது..

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற, மலைவாழ் மக்களின் குழந்தைகளை நீயெல்லாம் மரம் ஏறுவதற்கு தான் லாயக்கு, மரத்திற்கு பதிலாக கயிறேறு.. தாவு, ஓடு, பிடி, அடி.. உனக்கு இராணுவத்தில், காவல்துறையில் வேலை தருகிறேன்..

வேலைக்கு வந்த பிறகு, மக்களுக்காகப் போராடுகிறேன், மாணவர்களுக்காகப் போராடுகிறேன், சம கல்வி கொடு, தக்க வேலை கொடு, மரத்தைக் காப்பாற்றுகிறேன், மலையைக் காப்பாற்றுகிறேன் என்று தெருவிற்கு வருபவர்களையெல்லாம் அடி, விரட்டு, சுட்டுத்தள்ளு... 

நான் உனது தகுதிக்கும் திறமைக்கும் தக்கவாறு இராணுவத்தில், காவல் துறையில் வேலை தருகிறேன்.. காலமெல்லாம் சிப்பாயாக இரு.. என் காலடியில் கிட.. தூக்கிப் போடும் பந்தை எடுத்து வா என்று தான் முப்படைத் தளபதி சொல்கிறார் என்று தான் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது..

ஒரு அரசு கொடுக்கும் கல்வி என்ன செய்யும், ராணுவமும் காவல்துறையும் சட்டங்களும் என்ன செய்யும், யாருக்காக, யாரை எதிர்க்கும், யாரை அடிக்கும் என்று தெரியாத கூமுட்டைகள் வேண்டுமானால் நம்பித் தொலைக்கட்டும்..

ஒரு மலைவாழ் மாணவன் ஆசிரியராக, பேராசிரியராக, மருத்துவராக, விஞ்ஞானியாக வரக்கூடாதா... வரக்கூடாது என்று தான் கல்விக் கொள்கை சொல்கிறது.. அதற்காக தான் நீ புத்தகப்பை இல்லாமல் தொழில்கல்வி கற்கப் போ என்கிறது.. மரம் ஏறு, தேன் எடு, கிழங்கு தோண்டு.. சான்றிதழ் தானே வேண்டும்.. வாங்கிக் கொள்.. உனக்கு நான் சிப்பாய் வேலை கொடுக்கிறேன் என்கிறது..

பாயிண்டுக்கு வருவோம்..

இந்தக் கொள்கையில் 6.17வது பாயிண்ட் இப்படிச் சொல்கிறது : பாதுகாப்பு அமைச்சகத்தின் உதவியுடன், மாநில அரசுகள் பழங்குடியினர் அதிகமுள்ள பகுதிகளில் அவர்களின் மேல்நிலைப்பள்ளிகளில் என்.சி.சி. பிரிவுகளை உருவாக்க ஊக்குவிக்கலாம். இது மாணவர்களின் இயல்பான திறமை மற்றும் தனித் திறனைக் கண்டறிந்து பண்படுத்த உதவும். இது பாதுகாப்பு படைகளில் வெற்றிகரமான வேலைவாய்ப்புகளுக்கு உதவும்..

இந்தக் கருத்துகளைத் தான் முப்படைத் தளபதி பேசியிருக்கிறார். அவர் பாயிண்டாகத் தான் பேசியிருக்கிறார்.. நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் இது போன்ற கூடுதல் திறன் வளர்க்கும் மன்றங்களை உருவாக்குவதற்கு தான் ஒரு அரசு திட்டமிட வேண்டும்..

மாறாக இந்தப் பகுதியில் இந்த திட்டத்தை கூடுதல் கவனமெடுத்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதன் உள்நோக்கம் என்ன? உன் தகுதிக்கு இதுதாண்டா லாயக்கு.. வேற எதையும் நீ யோசிக்காதே என்று சொல்வதாகத் தானே இருக்கிறது..

எனில், இராணுவம், காவல் துறைப் பணிகளை இழிவாக நினைக்கிறீர்களா என்றால் அவையெல்லாம், ஆயுதமேந்திய இந்த தனிவகைப் படைகளெல்லாம் தேசத்தைப் பாதுகாக்கவா அல்லது தனியுடைமைச் சொத்துகளைப் பாதுகாக்கவா என்பதை நாங்கள் அறிவோம்..

அரசின் அடுக்குமுறைக் கருவிகள் தான் இவை என்பதை நாங்கள் நிறையவே அனுபவப் பூர்வமாகவே அறிந்திருக்கிறோம்.. அது இந்தியாவின் ஸ்டெர்லைட் படுகொலைகளாக இருக்கட்டும், அமெரிக்காவின் பிளாய்ட் படுகொலையாக இருக்கட்டும்.. ஏராளமான சந்தர்ப்பங்களில் அதை அரசுகள் உணர்த்திக் கொண்டே தான் இருக்கின்றன.. அவை ஒரு பக்கம் இருக்கட்டும்..

நான் இராணுவத்திற்கு போக வேண்டுமா, நீதிபதி ஆக வேண்டுமா, விஞ்ஞானியாக வேண்டுமா அல்லது உள்ளூர் தொழில் தொடங்கி நடத்த வேண்டுமா என்பதை நான் முடிவு செய்து கொள்கிறேன்.. நீ இந்த வேலைக்கு தான் லாயக்கு என்பதை நீங்கள் சொல்லாதீர்கள் என்கிறார்.