புத்தம் புதிய கார்களின் டயர்கள் மட்டும் தான்! சென்னையை கலக்கும் பலே திருடன்! பீதியில் கார் ஓனர்ஸ்!

சென்னையில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் 4 டயர்களை திருடிவிட்டு கல்லை வைத்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.


சென்னை ஜே ஜே நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்பாபு .இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் அவர் மாருதி சுசுகி சியாஸ் என்ற மாடல் காரை புதிதாக வாங்கியுள்ளார்.அவர் அந்த காரில் தான் தினமும் தனது அலுவலகத்திற்கு சென்றுவருவார்.

இதையடுத்து தனது வீட்டின் முன்பு காரை நிறுத்தும் அளவிற்கு போதிய இடவசதி இல்லாததால் தனது உறவினரின் வீடான அடுத்த தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன்பு தனது காரை நிறுத்தி வந்துள்ளார். இதையடுத்து சனிக்கிழமை இரவு பணி முடிந்து வந்ததும் தனது காரை தனது உறவினர் வீட்டில் முன்பு நிறுத்தி விட்டு தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை அங்கு போய் பார்த்தபோது காரில் உள்ள நான்கு டயர்களையும் கழட்டி விட்டு அந்த இடத்தில் கல்லை வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.  இதைப்பார்த்து அதிர்ந்த மகேஷ்பாபு இதுகுறித்து ஜே ஜே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காரை சுற்றி ஏதாவது தடயம் இருக்குமோ என்ற நோக்கத்தில் தேட ஆரம்பித்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து திருடர்கள் யார் என்பதை கண்டறிய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் திருட்டு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ஒருவரது வீட்டில் திருடச் சென்ற திருடர்கள் அங்கு எந்த ஒரு பொருளும் கிடைக்கவில்லை என அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு வருவதும் மற்றும் ஆதங்கத்தில் வீட்டில் உள்ள பொருட்களை போட்டு உடைத்துவிட்டு வருவதும் தற்போது பெருமளவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது ஒரு புதுவிதமான திருட்டாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அங்கு நிற்கும் காரை திருட முடியவில்லை என எண்ணி காரின் சக்கரங்கள் திருடி விற்றால் போதும் என்ற நோக்கத்தோடு திருடர்கள் செயல்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிசிடிவி கேமராவில் பதிவான வாகனங்களின் பதிவு எண்களை வைத்து திருடர்களை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.