இப்போ புதிய மின் இணைப்புக்கு கட்டணம் உயர்ந்தாச்சு..! அடுத்து மின்சாரக் கட்டணம் கூட்டப் போறாங்களா?

மின்சார வாரியம் கடும் நஷ்டத்தில் இயங்கிவருகிறது என்பதை சொல்லவே வேண்டியதில்லை.


மின்மிகை மாநிலமாகிவிட்டது என்று ஜெயலலிதா சொல்லிவிட்ட பிறகும் வெளிநபர்களிடம் இருந்துதான் மின்சாரம் வாங்கவேண்டிய சூழல் இருக்கிறது.

அதனால் இப்போது தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு பெறுவோர் மின் இணைப்பு கட்டணம், மீட்டர் வைப்புத் தொகை, பதிவு கட்டணம், வளர்ச்சி கட்டணம், வைப்புத் தொகை ஆகியவற்றை செலுத்த வேண்டும் என்று மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுப்படி தாழ்வழுத்த ஒருமுனை மின் இணைப்புக்காக பல்வகை கட்டணமாக வசூலிக்கப்பட்ட 1,600 ரூபாய், 6,480 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான வைப்புத் தொகை 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. பதிவு கட்டணம் 50 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகி உள்ளது. மீட்டர் வைப்பு கட்டணம் ரூ.600, வளர்ச்சி கட்டணம் சென்னைக்கு 400 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. மற்ற பகுதிகளுக்கு இது 1, 400 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.

இதன் மூலம் சென்னைக்கு மின் இணைப்பு கட்டணம் 1600 ரூபாயில் இருந்து 6 ஆயிரத்து 400 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கு 1,600 ரூபாயில் இருந்து 2,800 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இவைதவிர மும்முனை இணைப்பு மற்றும் மற்ற பிரிவுகளுக்கான மின் இணைப்பு கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மும்முனை இணைப்புக்கான கட்டணம் 500 ரூபாயில் இருந்து 750 ரூபாய் முதல்1000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. வளர்ச்சி கட்டணம் 1,400 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்லூரி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், தொழிற்சாலைகள், கடைகள், வணிக தலங்களுக்கு மும்முனை மின் இணைப்பு 750 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. விசைத்தறி, குடிசை தொழில்களுக்கு ஒருமுனை மின்சார இணைப்பு கட்டணம் 500 ரூபாயில் இருந்து 750 ரூபாயாக உயர்ந்துள்ளது. இணைப்பு தவிர, வைப்புத் தொகை, வளர்ச்சி கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

ஆனால், இந்த கட்டண உயர்வு காரணமாக மின்சார வாரியத்துக்குப் போதுமான வருமானம் கிடைக்காது என்பதால், மின்சாரக் கட்டணத்தை நிச்சயம் உயர்த்தியே தீரும் நிலை இருக்கிறதாம். பார்க்கலாம்.