இதுதான் உண்மையான செக்ஸ் கல்வி. சபாஷ் நெட்ஃப்ளிக்ஸ்

‘செக்ஸ் எஜுகேஷன்’ என்ற பெயரில் நெட்ஃப்ளிக்ஸில் ஒரு டாக்குமென்டரி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதில் வரும் ஒரு காட்சி உலக அளவில் பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதுதான் அந்தக் காட்சி.


ஒரு பெண்ணுறுப்பின் புகைப்படம் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் இடையில் பரவலாக பரப்பப்படுகிறது, விடலைக் குறுகுறு ஆர்வம் அது. பெண்ணுறுப்பிற்கு உரியவளும் அதே பள்ளியில்தான் படிக்கிறாள். ஒரு நிலையில் அப்புகைப்படம் ஆசிரியர்கள் வரை தெரியவருகிறது. அனைவர்க்கும் இது யாருடைய புகைப்படம் என்றும் தெரிகிறது. 

அவள் ரகசியமாக வைத்திருந்த புகைப்படம் வெளியில் கசிந்தது குறித்து அதிர்ச்சிக்கு உள்ளாகிறாள். அதற்கு காரணம் தன்னுடைய தோழிதான் என்றறிந்து மேலும் மனக்கசப்பு கொள்கிறாள். தன் பெண்ணுறுப்பை அனைவரும் பார்த்து விட்டதை அவமானமாகக் கருதத் துவங்குகிறாள். இந்த தலைகுனிவிலிருந்து மீள வழி தெரியாமல் சக மாணவர்களின் கேலி கிண்டலை சமாளிக்கத் தெரியாமல் திணறி நிற்கிறாள்.

இப்படி ஒரு புகைப்படம் பகிரப்படுவது குறித்து தலைமை ஆசிரியர் எல்லா மாணவர்களையும் கண்டிப்பதற்காக அழைக்கிறார். யாருடைய புகைப்படம் இது என்று கேட்கிறார். எல்லோரும் அது ரூபியுடைய பெண்ணுறுப்பு என்று கேலியாக சிரித்தபடி சொல்கிறார்கள். ரூபி தலைகவிழ்ந்து அமர்ந்திருக்கிறாள். அங்கு ஒரு மனம் குற்ற உணர்ச்சியோடு விரிவடைகிறது. புகைப்படத்தை முதலில் பரப்பிய தோழியின் மனம் அது. அவள் எழுகிறாள். எழுந்து., இது ரூபியுடைய பெண்ணுறுப்பு அல்ல என்னுடையது என்கிறாள். அவளைத்தொடர்ந்து இன்னொரு பெண் எழுகிறாள். இது என்னுடைய உறுப்பு என்கிறார்.

இன்னொருத்தி இன்னொருத்தி இன்னொருத்தி

என்று இந்த மனவிரிவு பரவி அரங்கம் முழுக்க மாணவிகள் மட்டுமன்றி மாணவர்கள் முதற்கொண்டு ஒருமித்து சொல்லத் துவங்குகிறார்கள். ‘இது என்னுடைய உறுப்பு’ எல்லோரும் சொல்லி முடித்த பிறகு இறுதியாக எழுகிறாள் ரூபி, தன் தோழியிடம் தன் கரங்களைத் தருகிறாள் அவள் பற்றிக்கொள்கிறாள்,

குனிந்திருந்த தலையை நிமிர்த்திச் சொல்கிறாள் பெருமையாக "இது என்னுடைய உறுப்பு". ஒவ்வொரு மாணவனும், மாணவியும் பார்க்கவேண்டிய படைப்பு இது.