நீட் கொடூரம்! தேர்வு எழுதிய மாணவி மயங்கி விழுந்து பலியான பரிதாபம்!

நீட் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய மாணவி பேருந்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாப்பணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா.  இவர் ஒரு மாற்றுத் திறனாளி மாணவி. அண்மையில் வெளியான 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்.

மருத்துவர் கனவில் கடந்த 2 வருடங்களாக நீட் தேர்வுக்கு சந்தியா தயாராகி வந்தார். இந்த நிலையில் கமுதியை சேர்ந்த சந்தியாவுக்கு மதுரையில் நீட் தேர்வு எழுதி மையம் ஒதுக்கப்பட்டது.

நேற்று தேர்வு எழுத வந்த அவர் தேர்வை முடித்துவிட்டு ஊர் திரும்ப திருப்புவனம்  செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் சென்று கொண்டிருந்த போதே திடீரென சந்தியா மயக்கமடைந்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து  மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி சந்தியா உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறியபடியே சந்தியா உடலை வாங்கிச் சென்றனர்.

 நீட் தேர்வுக்கு சென்ற மாணவி சடலமாக வந்த சம்பவம் கமுதி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சந்தியா குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.