தேனியை அடுத்து கோவையில் இரண்டு பேர் ஆள் மாறாட்டம்? சூடு பிடிக்கும் நீட் தேர்வு முறைகேடுகள்!

ஆள் மாற்றாட்டம் செய்து நீட் தேர்வில் வெற்றிபெற்ற உதித் சூர்யாவையும் அவரது குடும்பத்தையும் இப்போதுதான் கூண்டோடு தூக்கி விசாரணை செய்துவருகிறது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்.


தேனி சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

உதித் சூர்யாவைப் போன்று எத்தனைபேர் மோசடியாக தேர்வு எழுதியிருக்கிறார்கள் என்று நீதிமன்றம் கண்டனக் குரல் எழுப்பியது. அந்தக் கேள்விக்கு இன்றைய தினமே கோவையில் இருந்து விடை கிடைத்துள்ளது.

ஆம், அரசு உத்தரவின் பேரில் கோவை பி,எஸ்.ஜி. தனியார் மருத்துவக் கல்லூரியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது இந்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்து முதலாம் ஆண்டு பயின்று வந்த இரு மாணவர்களின் நீட் ஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்படங்கள் வெவ்வேறாக இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உதித் சூர்யாவைப் போன்றே வேறு மாணவர்கள்தான் நீட் தேர்வு எழுதியிருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்தக் கல்லூரியின் டீன் ராமலிங்கம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ‘‘முதல் ஆண்டு படிக்கும் 150 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. கல்லூரியின் விசாரணைக்குக் குழு மேற்கொண்ட சான்றிதழ் சரிபார்ப்பில் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவியின் நீட் ஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்படமும் மாறுபட்டிருப்பது தெரியவந்தது.

இருவரின் பெற்றோர்களையும் அழைத்து விசாரித்ததில் புகைப்படம் சரியானதுதான் என்று தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் செம சூடாகும் போல் தெரிகிறதே..!