கொரோனா - தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை - அரசை ஆலோசிக்கச் சொல்கிறார் கே. பாலகிருஷ்ணன்!

கரோனா வைரசு தாக்குதலைத் தடுப்பதற்காக அரசு செய்யவேண்டிய நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ள மார்க்சிய கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருட்டிணன், மாவட்டம்தோறும் ஆய்வகம் அமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

” மிக எளிதில் பரவும் தன்மை கொண்ட கொரொனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான பன்முகத்தன்மையிலான நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். பொது சுகாதாரத் துறையின் அறிக்கைப்படி, மாநிலம் முழுவதும் 1225 பேருக்கு பூர்வாங்க சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், 72 பேருக்கு ரத்த மாதிரி உள்ளிட்ட உயர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், ஐந்து பேருக்கு நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதால், அவர்கள் தீவிர சிகிச்சையில் கண்காணிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுகாதாரத்துறை அமைச்சரின் மற்றொரு அறிவிப்பில், மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 300 தனிமைப்படுத்தபட்ட படுக்கைகள் கொரொனா நோயாளிகளுக்காக என பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் மட்டும் போதுமானதல்ல என சுட்டிக்காட்ட விரும்புவதோடு, நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த முறையிலான பன்முக நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு முன்வர வேண்டும்.

நோய் கண்டறிவதற்கான சோதனைகளில் ஒருவருடைய சளி மற்றும் ரத்த மாதிரி உள்பட்டவற்றை பரிசோதிப்பதற்கான வசதி தற்போது சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் மட்டுமே உள்ளது. தேனி மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்படுவதாகக் கூறியிருந்த மாநிலத்தின் இரண்டாவது சோதனை மையமும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு வேளை அதிகமான எண்ணிக்கையில் நோயாளிகளின் சளி, ரத்த மாதிரி உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்ய வேண்டுமெனில் அவற்றை மகாராஷ்டிரா மாநிலம் புனே நகருக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலையே தற்போது உள்ளது. எனவே, நோய் கண்டறிவதற்கான பரிசோதனை மையங்களை உடனடியாக மாநிலத்தின் பரவலான இடங்களில், வாய்ப்பிருந்தால் மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவிலேனும் அமைப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும் நோய் கண்டறியப்பட்டுள்ளவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்களும் மாநிலத்தின் பல இடங்களில் ஊரகப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட வேண்டும். கரோனா நோய் வந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் செயற்கை சுவாசம் அளிக்க தேவைப்படும் ''வென்டிலேட்டர்''களை தேவையான அளவில் தயார் நிலையில் வைக்கவேண்டும்.

தற்போது ஊரக பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளின் பராமரிப்பையும், கட்டமைப்பையும் மேம்படுத்திட வேண்டும். அண்மையில் புதியதாக உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதால், அவற்றின் சார்பிலும் கிராமப்பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் அணியும் பாதுகாப்பு உடைகள் போல் தமிழக மருத்துவர்களுக்கும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவையனைத்திற்கும் உரிய நிதியை உடனடியாக தமிழக அரசு ஒதுக்கிட வேண்டும் . அதேபோல முகக் கவசத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், கூடுதல் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது. எனவே முகக் கவசங்கள் குறைந்த விலையிலும், தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் பிரதானமாக கூடுகிற இடங்களான பேருந்து, ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தொடர்ச்சியாக நோய்த் தடுப்பு மருந்துகளை தெளிக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

தற்போது தொலைபேசிகளில் அழைப்பை மேற்கொள்ளும் போது கொரொனா நோய் தொடர்பான விழிப்புணர்வு அறிவிப்பு ஆங்கிலத்தில் வருவதை தமிழிலும் அறிவிக்க அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பிரச்சனை தீரும் வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்குகள் மற்றும் கேளிக்கை மற்றும் விளையாட்டுக் மைதானங்கள் (ஐபிஎல் உள்பட), அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு நடைபெறும் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்தும், குறிப்பாக 5ஆம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கு பள்ளி ஆண்டு இறுதித்தேர்வை ரத்துசெய்து விடுமுறை அளிப்பது குறித்தும் தமிழக அரசு உரியமுறையில் ஆலோசிக்க வேண்டும்.

ஏனெனில் கொரொனா நோய் மிக எளிதாக பரவும் தன்மை கொண்டதாக இருப்பதால், நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படுவதிலும், நோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் முனைப்புடன் கூடிய நடவடிக்கைகளை தமிழக அரசு உறுதி செய்திடவேண்டும். 

கொரொனா தாக்குதலைத் தடுப்பதற்கு கேரள அரசு மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் போல், தமிழக அரசும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகள் உள்பட்ட அனைத்து வர்க்க - வெகுமக்கள் அமைப்புகளும் கரொனா நோய்த் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் கட்சி அணிகள் ஈடுபடவேண்டும்” என்றும் பாலகிருஷ்ணனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.